"கொள்கை உறுதியும், தலைமை மீது விசுவாசமும்".. ஜெயலலிதா அப்படி சொன்னாரே.. இன்று செங்கோட்டையன் நீக்கம்
சென்னை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பும் வைத்துக்கொண்டது உள்ளிட்ட காரணங்களால் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்." என ஜெயலலிதா முன்பு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோதே அக்கட்சியில் இணைந்தவர் செங்கோட்டையன். செங்கோட்டையன், கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி கட்சியிலிருந்து செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

செங்கோட்டையன் நீக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் ஒன்றாகச் சென்று மரியாதை செலுத்தியிருந்த நிலையில், அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன், அதிமுகவின் பல்வேறு பதவிகளையும், தமிழக அரசில் பல துறையின் அமைச்சர் பதவிகளையும் வகித்தவர். அதிமுகவின் ஆட்சிக்குழு தலைவராகவும், கட்சியின் தலைமை செயளலாளராகவும் பதவி வகித்துள்ளார். செங்கோட்டையன் நீண்ட காலமாக தமிழக சட்டப்பேரவையின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தற்போது கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏவாக உள்ளார்.
செங்கோட்டையன் - எடப்பாடி பனிப்போர்
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சில தனிப்பட்ட பிரச்சனைகளால் இவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால், கட்சியிலிருந்து ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வரான போது, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆனார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி உடனான பனிப்போர் நிலவியபோது, பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாகப் பார்த்தவன் நான். ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் கை அசைக்கும்போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். ஏன் கழற்றி விட்டார் எனக் கேட்பார்கள். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது, அதையெல்லாம் சொன்னால் தவறாகப் போய்விடும்.
ஜெயலலிதா பேசியது
ஏன் செங்கோட்டையனுக்கு கட்சியில் 2 பெரிய பொறுப்புகளை தந்தேன் என ஜெயலலிதா சொன்னது இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. "எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர் செங்கோட்டையன்" எனக் கூறினார் ஜெயலலிதா" எனத் தெரிவித்தார் செங்கோட்டையன்.
தொடர்ந்து, தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசும் ஆடியோ ஒன்றையும் மைக் முன்பு போட்டுக் காட்டினார் செங்கோட்டையன். "இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்." என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டுக் காட்டினார்.
என்றைக்கும் தொண்டன்
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். நான் என்றைக்கும் என்னை தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் தொண்டன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதில் இருந்து நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கோள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய செங்கோட்டையன், "என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications