சென்னையில் வேலை.. இப்படியுமா பெண் பொய் சொல்லுவாங்க.. பிரபல நிறுவனத்தில் நடந்த கூத்து
சென்னை: சென்னையில் உள்ள பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலையில் சேரவும், வேலையைவிட்டு விலகவும் பலர் வித்தியாசமான பொய்களை கூறுகிறார்கள். ஆனால் ஒரு பெண் சொன்ன பொய், குறிப்பிட்ட நிறுவனத்தையே ஆடிப்போக வைத்துள்ளது. பெற்ற தந்தையை வைத்து அவர் கூறிய பொய், அதனை தொடர்ந்து ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் தந்த ஜாக்பாட் ஆகியவற்றுக்காக நடந்த நாடகத்தை நெட்டிசன் ஒருவர் அம்பலப்படுத்தி உள்ளார். அது பற்றி பார்ப்போம்.
BeckyFan என்ற பெயரில் உள்ள நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் வேலைக்காகப் புதிதாக ஒரு பெண்ணைத் தேர்வு செய்திருந்தோம். நேர்முகத் தேர்வுகள் முடிந்து, அவர் பணியில் நாளில் அவர் வேலைக்கு வரவில்லை. மாறாக, HR-க்கு போன் செய்து ஒரு துக்கமான செய்தியைச் சொன்னார்.

"என் அப்பா திடீரென இறந்துவிட்டார். அந்தத் துக்கத்தில் இருப்பதால், என்னால் இப்போது வர முடியாது. நான் பணியில் சேர இன்னும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்" என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் HR உடனடியாக மேனேஜ்மெண்டிடம் விஷயத்தைச் சொன்னார். நாங்களும் மனிதாபிமான அடிப்படையில் மிகவும் வருத்தப்பட்டோம். "இது பேரிழப்பு. அவருக்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளட்டும். அவசரம் ஏதுமில்லை, " என்று சொல்லிவிட்டோம்.
ஆனால், அடுத்த ஒரு வாரத்திலேயே அந்தப் பெண் மீண்டும் அழைத்தார். இம்முறை அவர் சொன்ன காரணம் தான் அதிர்ச்சியின் உச்சம்.
"நான் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே எனக்கு நீங்கள் தருவதை விட அதிக சம்பளம் தருவதாகச் சொல்லிவிட்டார்கள். அதனால் நான் இங்கேயே பணியைத் தொடரப் போகிறேன். உங்கள் கம்பெனிக்கு வரவில்லை" என்று சர்வசாதாரணமாகச் சொல்லி முடித்துவிட்டார்.
அப்போதுதான் நடந்த உண்மை புரிந்தது. பழைய கம்பெனியில் அவருக்குச் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை (Discussion) முழுமையாக முடிவடையவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை முடியும் வரை, இந்தப் புதிய வேலை வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் "பொய்". அதுவும் சாதாரண பொய் அல்ல, "பெற்ற அப்பாவே இறந்துவிட்டார்" என்கிற படுபாதகமான பொய்.

வேலை மாறுவதும், அதிக சம்பளத்திற்காக பேரம் பேசுவதும் கார்ப்பரேட் உலகில் சகஜம் தான்; அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால், அந்த இடைப்பட்ட நேரத்தைக் கடத்துவதற்காக, பெற்ற தகப்பன் இறந்துவிட்டார் என்று நா கூசாமல் பொய் சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என்பதை நினைக்கும்போதே அருவருப்பாக இருக்கிறது. பணத்திற்காகப் பெற்றோரையே செத்துட்டாங்க என பொய் சொல்லும் அளவுக்கு இவ்வளவு கேவலமான மனநிலையா? எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் ?" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications