அமமுகவிலிருந்து அதிமுகவிற்கு "ஜம்ப்" செய்த பாலசுந்தரம்.. டிடிவி தினகரனுக்கும் குட்டு
சென்னை: அதிமுகவை ஒன்றிணைப்பது ஒருபக்கம் இருக்கட்டும், முதலில் டிடிவி தினகரன் குடும்பத்தோடு ஒன்றியணையட்டும் என்று அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி பாலசுந்தரம் விமர்சித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி என்று கூறிவிட்டு, நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவும், ஜெயலலிதா மரணத்தை மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர் செல்வத்துடன் நட்பு பாராட்டி வருவதால், உண்மையான அதிமுகவில் இணைந்ததாக பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்று பேட்டியளித்தார்.
இதனால் அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகியோர் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை இணைக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக கூறப்பட்டது.

அதிமுகவில் அமமுக நிர்வாகிகள்
இருந்தும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பில் அதிமுகவை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலராகவும், மண்டலப் பொறுப்பாளராகவும் இருந்த ஆா்.பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் அய்யனாா் ஆகியோா் அதிமுகவில் சோ்ந்தனா்.

டிடிவி தினகரன் கொள்கை
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சிவி சண்முகத்தை சந்தித்து இருவரும் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தனா். இதனைத்தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாலசுந்தரம் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. டிடிவி தினகரனின் கொள்கை பிடிக்காததால் கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம்.

குடும்பத்தில் ஒன்றிணையட்டும்
அதிமுகவை ஒன்றிணைப்பது இருக்கட்டும். முதலில் டிடிவி தினகரன் தனது குடும்பத்தில் ஒன்றிணையட்டும். அமமுகவில் என்னை போல் பேச முடியாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் அமமுக தொடர்பான செய்திகள் எதுவும் டிடிவி தினகரன் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சியில் வருவதில்லை. அதற்காக அதற்கு நாங்கள் பலிகடா ஆகமாட்டோம். அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி அமமுக கட்சியை ஆரம்பித்துவிட்டு, இப்போது வேறு மாதிரி டிடிவி தினகரன் பேசி வருகிறார்.

உண்மையான அதிமுக
எத்தனை ஆண்டுகள் சிறை சென்று வந்தாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லிவிட்டு தற்போது அவரது நிலைபாட்டை மாற்றியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்ன ஓபிஎஸ்வுடன் நட்பு பாராட்டி ஒன்றிணைவோம் வாருங்கள் என்கிறார். இதனால் அமமுகவில் இருந்து விலகி, உண்மையான அதிமுகவில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications