பாதிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி அல்ல.. யாரும் தொடாத விஷயத்தை பிடித்த நீதிபதி! ஷாக் ஆன வழக்கறிஞர்கள்
சென்னை: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பில் குறிப்பிட்ட ஒரு முக்கியமான அம்சம், பரபரப்பை ஏற்படுத்தியது. அமலாக்கத்துறை கூட தொடாத அந்த விஷயத்தை தீர்ப்பு வாசிக்கும்போது சுட்டிக்காட்டினார் நீதிபதி சிவி கார்த்திகேயன்.
கடந்த 2014ஆம் ஆண்டு அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாகத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

செந்தில் பாலாஜி வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் எனக் கூறி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் நேற்று பதில் வாதங்கள் வைக்கப்பட்டது.
3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் என்றும், அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும், நீதிபதி பரத சக்ரவர்த்தி தீர்ப்புடன் தாம் உடன்படுவதாகவும், 3வது நீதிபதி சிவி கார்த்திகேயேன் தீர்ப்பளித்தார்.
ஒரு வார்த்தை கூட பேசலையே: சிவி கார்த்திகேயன் தீர்ப்பை வாசிக்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணையில், அமலாக்கத்துறையினரே முன்வைக்காத ஒரு கோணத்தை நீதிபதி தீர்ப்பு வாசிக்கும்போது குறிப்பிட்டார். செந்தில் பாலாஜியால் பாதிக்கபட்டவர்களைப் பற்றி வழக்கில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை சுட்டிக்காட்டினார் 3வது நீதிபதி.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டவர் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ததற்கு முன்னோடி குற்றமாக கருதப்படும், போக்குவரத்து கழகத்தில் வேலை பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்களை பறறி இங்கே ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. ஒரு எழுத்து கூட எழுதப்படவில்லை. இதை நான் இங்கே மிக வேதனையோடு சுட்டிக்காட்டியாக வேண்டும்.
நகைகள், நிலத்தை விற்று: பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் துயரங்களை இந்த நீதிமன்றம் மறக்கவில்லை. ஒருவேளை அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் சமரசமாக விரும்பி சென்றிருந்தாலும் கூட அவர்கள் தங்கள் வீட்டு பெண்களின் வளையல்களை விற்று அல்லது வீட்டை, நிலத்தை அடமானம் வைத்து அல்லது விற்று பணம் கொடுத்திருப்பார்கள் என்பதை மறந்துவிட முடியாது.
மோசடியாக பணம் யார் மூலமாக யாரிடம் சென்றது. அதை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி கார்த்திகேயன். பாதிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி என்று அவரது தரப்பு வாதிட்டது. அமலாக்கத்துறையோ, செந்தில் பாலாஜியை விசாரணைக்கு எடுக்கும் அதிகாரங்கள் பற்றியே வாதாடியது.
அமலாக்கத்துறையின் அதிகாரம் செல்லுபடியாகுமா என்கிற ரீதியிலேயே இந்த வழக்கின் ஒட்டுமொத்த விசாரணையும் நடைபெற்று வந்த சூழலில், இந்த வழக்கிற்கு முதல் காரணமான வேலைக்காக பணம் கொடுத்து மோசடி செய்யப்பட்டவர்கள் தரப்பின் நியாயத்தை நிதிபதி சிவி கார்த்திகேயன் சுட்டிக்காட்டியது பெரும் திருப்பமாக அமைந்தது. நீதிபதி தீர்ப்பு வாசிக்கும்போது குறிப்பிட்ட இந்த விஷயம் வழக்கறிஞர்களின் புருவத்தை உயரச் செய்தது.












Click it and Unblock the Notifications