ஒரு வழக்கில் ஜாமீன்.. இன்னொரு ரூபத்தில் வந்தது பிரச்னை: அமர் பிரசாத்துக்கு நவ.10 வரை நீதிமன்ற காவல்!
சென்னை: அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே புழல் சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டி, கோர்ட் உத்தரவையடுத்து, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டில் அனுமதியின்றி கொடி கம்பம் அமைத்ததை அகற்றும் போது மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகன கண்ணாடியை உடைத்த பாஜகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டியும் ஒருவர். அவர் கடந்த 21ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.

பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நவம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த அரசு விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன் பேரில் தற்போது சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். இதுகுறித்த தகவல் புழல் சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமர் பிரசாத் ரெட்டி.












Click it and Unblock the Notifications