"மனைவி வங்கி கணக்கில் வெறும் 8 ரூபாய்.." அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் நிலையில், பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் போட்டியிடுகிறார். ஜெயவர்த்தன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு: தனது பெயரிலும் தனது மனைவி மகன் பெயரிலும் சுமார் 86 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தங்களிடம் இருக்கும் அசையா சொத்து மதிப்பு 12.95 கோடி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடன் என்று வரும் போது 3 கோடி 99 லட்சத்து 38 ஆயிரம் கடன் இருப்பதாகவும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுவில் வேட்பாளர் தனது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்புகளையும் குறிப்பிட வேண்டும். அதன்படி ஜெயவர்த்தன் தனது மனைவி சொத்து மதிப்பையும் குறிப்பிட்டுள்ளார். அதில் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் வெறும் 8 ரூபாய் மட்டுமே இருப்பதாக ஜெயவர்த்தன் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் இப்போது வேகமாக டிரெண்டாகி வருகிறது.
யார் இவர்: தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஜே. ஜெயவர்த்தன் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். மருத்துவரான இவர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயவர்த்தன் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 26. இதன் மூலம் இளைய வயதில் எம்பி என்ற பெருமையை அவர் பெற்றார்.
கடந்த 2019 தேர்தலிலும் அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இருப்பினும், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் இதே தொகுதியில் அவர் 3வது முறையாகப் போட்டியிடுகிறார்.
தென் சென்னை தொகுதி: தென் சென்னை தொகுதியைப் பொறுத்தவரை அங்கே இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் நிலையில், பாஜக சார்பில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் டாக்டர் ஜே. ஜெயவர்தன் களமிறங்குகிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழச்சி தங்கபாண்டியன், ஜே. ஜெயவர்தன் இடையே தான் கடும் போட்டி இருந்தது. அதில் தமிழச்சி தங்கபாண்டியன் 5.64 லட்சம் வாக்குகள் பெற்று, சுமார் 2.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜே. ஜெயவர்தன் 3 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில், மக்கள் நீதி மய்யம் சுமார் 1.35 லட்சம் வாக்குகளைப் பெற்றது.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்
தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநராக இருந்து அக்காவாக திரும்பி வந்துள்ளேன்; உங்களுக்குப் பணி செய்ய காத்திருக்கிறேன் என உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.
திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆர். சச்சிதானந்தனுக்கு கார், பைக் இல்லையாம். அவரிடம் கையில் இருப்பது வெறும் ரூ.2000தான்.
தென்சென்னையில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தமிழிசை சவுந்தரராஜனிடம் சொந்தமாக கார், கூட இல்லை என்று அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications