எடப்பாடிக்காக யாரும் கட்சியில் சேரவில்லை.. செங்கோட்டையனுக்கு ஆதரவாக களமிறங்கிய கே.சி.பழனிசாமி
சென்னை: EPS தனது சுயநலத்தை மறந்து கட்சி வலிமையாக இருக்க ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையை பார்த்து எந்த உறுப்பினரும் அதிமுகவில் வந்து இணையவில்லை. MGR வகுத்த விதிகளின் படி அடிப்படை தொண்டர்களால் அதிமுகவுக்கு தலைமை அமைய வேண்டும் என்று முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கூறியுள்ளதாவது: செங்கோட்டையன் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. அதிமுக ஒன்றுபடவேண்டும், வலிமைப்பட வேண்டும், 2026ல் மீண்டும் ஆழ வேண்டும் என்ற அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கும் விதமாக நான் 2024 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எடுத்த முன்னெடுப்பைத் தொடர்ந்து அந்த கருத்துக்களை வலியுறுத்தி பேசியுள்ளார். நிச்சயம் அவர் பேசியது மிகவும் வரவேற்கத்தகுந்த கருத்துக்கள்.
எடப்பாடியை சந்தித்த 6 அமைச்சர்கள்
எடப்பாடி பழனிசாமி தன்னை முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் சந்தித்து ஒருங்கிணைப்பை வலியுறுத்தவில்லை என்கிற மாபெரும் பொய்யை அனைத்து ஊடகம், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்லி அவர் தரத்தையும், நேர்மையும் வெளிக்காட்டியுள்ளார். ஒருங்கிணைத்தால் மட்டுமே பிரச்சாரத்தில் பங்கெடுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து சற்று விலகி நிற்கிறார் செங்கோட்டையன்.
மேலும் 10 நாட்களில் முடிவுடுக்க வேண்டும் என்பதன் மூலம் மீண்டும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக உணர்த்துகிறார். இன்னும் பல அதிமுக முக்கியஸ்தர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் செங்கோட்டையன் பேசிவிட்டார். மீதம் இருக்கிற 5 பெரும் நிச்சயம் இந்த கருத்தை வலியுறுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே இருக்கிறது. குருமூர்த்தி அவர்கள் ஒன்றுபட்ட அதிமுகவை பாஜக விரும்புகிறது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார், அதை அமித்ஷா டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றுவார் என்று தெரிவித்திருக்கிறார்.
இபிஎஸ், ஜெயலலிதா
இதுவரை எல்லோரையும் "அம்மாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்" என்று சொல்லிக்கொண்டு வந்த எடப்பாடியே 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் என்கிற உண்மையை உலகறிய உரக்கச் சொல்லியிருக்கிறார் செங்கோட்டையன். EPS ஜெயலலிதா போல செல்வாக்கு பெற்ற தலைவர் அல்ல.
2011 தேர்தலுக்கு பிறகு சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசியபோது "தேமுதிகவுடன் எனக்கு கூட்டணி வைக்க விருப்பம் இல்லை ஆனால் என் கட்சிக்காரர்கள் விரும்பினார்கள் அதனால் கூட்டணி வைத்தேன்" என்றார். அப்பொழுது தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ கட்சிக்காரர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார் அவர். எம்.ஜி.ஆர் எல்லோரையும் அரவணைத்தார்.
ஒருங்கிணைத்த ஜெயலலிதா
விலகிச் சென்றவர்களையும் ஒருங்கிணைத்தார். ஜெயலலிதாவும் விலக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்றவர்களையும் அரவணைத்தார் ஒருங்கிணைத்தார். அந்த வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்கிற இந்த கோரிக்கையை ஏற்று நடப்பாரா?. செங்கோட்டையன் இன்று சொன்னதை 2 வருடத்துக்கு முன்பே வலியுறுத்தியுள்ளேன்.
எடப்பாடியை பார்த்து..
EPS தனது சுயநலத்தை மறந்து கட்சி வலிமையாக இருக்க ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையை பார்த்து எந்த உறுப்பினரும் அதிமுகவில் வந்து இணையவில்லை. புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும். MGR வகுத்த விதிகளின் படி அடிப்படை தொண்டர்களால் அதிமுகவுக்கு தலைமை அமைய வேண்டும். யார் வேணாலும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடலாம், ஆனால் கட்சி தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications