'தன் வழி தனிவழி' மவுனப் புரட்சியாளர்-சமய சீர்திருத்தவாதி.. பங்காரு அடிகளாருக்கு கி.வீரமணி புகழஞ்சலி
சென்னை: மறைந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தன் வழி தனி வழி என செயல்பட்ட சமய சீர்திருத்தவாதி, மவுனப் புரட்சியாளர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
மேல்மருவத்தூரில் தனி பீடம் (மடம்) அமைத்து ஆன்மீகப் பணியாற்றியவர் பங்காரு அடிகளார். பெண்களிடையே ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தியவர். மாதவிடாய் காலத்திலும் பெண்கள், கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யலாம் என்கிற கோட்பாட்டை உருவாக்கியவர்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் ஆன்மீகம் சென்றடைந்திருக்கிறது. பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று காலாமானார். அவரது மறைவை தாங்க முடியாத செவ்வாடை பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து இறுதி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதையுடன் இன்று பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பங்காரு அடிகளார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பங்காரு அடிகளார் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்மருவத்தூரில் ஒரு பக்தி அமைப்பினை - அவருடைய சிந்தனைக்கு ஏற்ப அமைத்து வாழ்ந்த தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் (வயது 82) இயற்கை எய்தினார் (19.10.2023) என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லையென்றாலும்கூட, அதில் அவர் ஒரு மவுனப் புரட்சியாளராகவே இறுதிவரை இருந்தது மிகவும் வியக்கத்தக்கதாகும்!
தமிழிலேயே பூசை முறை, அதிலும் பெண்களே அதை நடத்தலாம் என்பது ஹிந்து ஸநாதனத்திற்கு உடன்பாடில்லாத ஒன்று என்று அறிந்து 'தன் வழி தனி வழி' என்று ஆக்கிக்கொண்டு வாழ்ந்தவர். வெறும் பக்தி திருப்பணியோடு அவர் நின்று விடாமல், மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்ற பல கல்வித் திருப்பணிகளையும் செய்தவர் என்ற முறையில், சமய சீர்திருத்தத்தில் அவர் ஒரு தனி முத்திரைப் பதித்து ஆரியத்தின் மறைமுக எதிர்ப்பினையும் எதிர்கொண்டு வளர்ந்தவர் - மனிதநேயர். அவரது மறைவால் வருந்தும் அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், அவரது பக்தர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் திராவிடர் கழகம் சார்பில் மனிதாபிமானத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications