இனி எல்லாம் எடப்பாடி தான்! தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலையில்லை! ஓபிஎஸ்க்கு அதிமுக மாஜி போட்ட குண்டு
சென்னை : உச்ச நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷனின் தீர்ப்பு வந்தாலும் சரி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான். இன்று இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பவர் , நிரந்தர பொதுச் செயலாளராக மாறுவார் என அதிமுக முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு தற்போது வரை முடிவில்லை. சொல்லப்போனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வரையே இந்த விவகாரம் தொடர்ந்து இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.
மே மாதம் ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக இருந்த நிலையில் அதற்கு பிறகாக அடுத்தடுத்த மாதங்களில் அவர்களுக்கு இடையேயான விரிசல் அதிகரித்துக் கொண்டே சென்றது.

அதிமுக விவகாரம்
தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாகவே இருவருக்கும் இடையேயான மோதலானது வெட்ட வெளிச்சமான நிலையில் அதற்கு அடுத்ததாக நடைபெற்ற பொதுக்குழுவில் எப்போதும் இல்லாத வகையில் தனது சொந்த கட்சி பொதுக்குழு உறுப்பினர்களாலேயே ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டார். பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் கலந்து கொண்ட நிலையில் தீர்மானங்கள் எதுவுமே செல்லாது என முன்னாள் அமைச்சரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சிவி சண்முகம் அதிரடி காட்டிய நிலையில் தண்ணீர் பாட்டில்களை வீசி ஓபிஎஸ்ஐ அங்கிருந்து வெளியேற்றியதாக செய்திகள் வெளியாகின.

பாஜக ஆதரவு
இதனை எதிர்பாராத அவர் கவிழ்ந்த தலையுடன் சோகமே வடிவாக பொதுக்குழுவில் இருந்து வெளியே வந்தார். அதற்கு பிறகு நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என பல விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. தற்போதைய சூழலில் பாஜகவுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. கூட்டணி தலைமை மற்றும் பிற விவகாரங்களில் எடப்பாடி தனது பேச்சைக் கேட்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பதால் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பாஜக மீண்டும் திரும்பி இருக்கிறது என்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
இதுகுறித்து பேசிய அவர்," எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும், எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர். அதிமுகவை பிளவுபடுத்த சில தீய சக்திகள் முயற்சிக்கின்றனர். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சி பிளவுபடுவதை சம்மதிக்காமல் 98 சதவீதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிற்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்
அதிமுக கட்சி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷனின் தீர்ப்பு வந்தாலும் சரி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான். இன்று இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பவர் , நிரந்தர பொதுச் செயலாளராக மாறுவார். கழகத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வார்.தீர்ப்பு நியாத்தின் பக்கம் தான் வரும். மெஜாரிட்டி யார் பக்கம் இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதையெல்லாம் மனதில் வைத்து தான் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.

பாமக
கூட்டணியில் இல்லை என்று அதிமுக, பாமக சொல்லவில்லை. பா.ம.க, மதிமுக கட்சிகளுக்கு தேர்தல் அங்கீகாரம் பெற்றுத்தந்தது அதிமுக தான். கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்த அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கலாம். சாதாரண சீமான் கூட நாங்க தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லுவார். மக்கள் நம்பிக்கை பெற கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்த சொல்லக்கூடிய வார்த்தை அது. தேர்தலின் போது அவர்கள் எங்களுக்கு உதவியாக இருந்திருப்பார்கள். எங்களால் அவர்களும் பயன்பெற்று இருப்பார்கள். அதிமுகவினால் பயன்பெற்ற கட்சிகள் தான் தமிழகத்தில் உள்ளன. அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கெல்லாம் அங்கீகாரம் பெற்று தந்தது அதிமுக தான்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications