மகளிர் உரிமைத் தொகை.. வங்கிக்கணக்கில் இன்று முதல் ரூ. 1000 வரவு.. செக் பண்ணுங்க இல்லத்தரசிகளே
சென்னை: மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார். இன்றைய தினமே ஏராளமானோர் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் பணி தொடங்கியுள்ளது. பல இல்லத்தரசிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. நிதி நிலையை காரணம் காட்டி அந்த திட்டத்தை நிறுத்தி வைத்தது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது.

குடும்ப பெண்களுக்கு உதவும் வகையிலான இத்திட்டமானது, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தன்று துவங்கப்படும் என்று 2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் முகாமும் மாநிலம் முழுவதும் ஜூலை 24 முதம் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்றது.
இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மணியார்டர்கள், வங்கி கணக்குகள் என்று பல்வேறு முறைகளில் பணம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் இத்தொகையை பெற தவறியவர்கள், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அக்டோபர் 2 ஆம் தேதி சேர்க்கப்பட்ட புதிய விண்ணப்பதாரர்களுக்கு அதே மாதமே 14 ஆம் தேதி இவ்வுரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதிலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு நிர்ணயித்த அத்திட்ட விதிகளில் கீழ் வராதவர்களாக நிராகரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தகுதி இருந்தும் விண்ணப்பித்தும் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று அதிகாரிகளிடத்தில் பெண்கள் முறையிட்டதன் பேரில் அதற்கான மறு வாய்ப்பும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. அதன் மூலம் 11.85 லட்சம் மகளிரிடம் இருந்து கலைஞர் மகளிர் உரிமை தொகையின் மேல்முறையீட்டு விண்ணப்பமானது மீண்டும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்கட்டமாக 1 ரூபாய் குறுஞ்செய்தி மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி வருவதால் அதற்கு முன்னதாகவே அதாவது நவம்பர் 10 ஆம் தேதி அன்றே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம் மட்டும் தற்போது விண்ணப்பித்து வரும் பயனர்களுக்கும், ஏற்கெனவே உள்ள பயனாளர்களுக்கும் நவம்பர் 10 முதல் 1000 ரூபாய் வழங்கப்படுவதற்கான ஆலோசனையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளைய தினம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத் தொகை 2ஆம் கட்டத்தை தொடக்கி வைக்க உள்ளார். தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு ஏடிஎம் கார்டுகளையும் வழங்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அன்றைய தினமே அனைவரின் வங்கிக்கணக்கிலும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்றைய தினமே 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான எஸ்எம்எஸ் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications