கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. விடுபட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! பெண்களுக்கு ரூ1000
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் நடைபெற உள்ளது.. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது கூடுதல் தளர்வுகளை அரசு கொண்டுவரும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் விடுபட்டவர்களுக்கும் ரூ.1000 கிடைக்க உள்ளதால், பெண்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருந்தார்.. இதன்படி பெண்களுக்கு மாத மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத்தொகை, ரேஷன் கார்டிலுள்ள குடும்பத்தலைவிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

விடுபட்ட பெண்கள்
இதற்காகவே, 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தகுதியான 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் பணியும் துவங்கப்பட்டது. இதையடுத்து, விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பேர், இந்த திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.
விரிவடையும் திட்டம்
ஆனாலும், விண்ணப்பித்த ஏராளமானோருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற அதிருப்தியும், புகாரும் எழுந்தது.. இதனால், நிராகரிக்கப்பட்டோர், மீண்டும் இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது.. அப்போது 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதிலிருந்து 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் கூடுதலாக இணைக்கப்பட்டனர்.
தற்சமயம், 1 கோடியே 14 லட்சம் பெண்கள் உதவித்தொகையை பெற்று வருகிறார்கள். எனினும், 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 25 லட்சம் பேரால், ரூ.1000 பெற முடியவில்லை. இந்த நேரத்த்தில்தான், ரேஷன் கார்டுகள் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு மறுபடியும் வழங்கப்பட்ட நிலையில், புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இந்நிலையில், மார்ச் மாதமே பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அடுத்த 3 மாதங்களில் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைக்கப்படுவார்கள் என்று நடந்து முடிந்த சட்டப்பேரவையிலும் அறிவிப்பு வெளியானது. அதன்படியே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது..
பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி இன்று 4ம் தேதி முதல் இதற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் நடைபெற உள்ளது. இதில், அதிகபட்சம் 15 லட்சம் பேர் வரை புதிதாக சேரக்கூடும் என்று தெரிகிறது.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை, மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் ஆவணங்கள்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், மற்றும் குடும்ப அட்டை போன்றவை) ஆகும்..
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஒரிஜினல் ஆவணங்களையும் இன்று நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு கொண்டு வந்து அங்குள்ள அலுவலர்களிடம் அதை காட்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.. அத்துடன், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்தும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. இந்த முகாம்கள் இலவசமாக நடத்தப்படுவதால், எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை,
முகாம்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டால், வரும் ஜூலை முதலே வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications