கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் குட் நியூஸ்? 45 நாளாயிருச்சு.. யாருக்கு ரூ.1000, எப்போது கிடைக்கும்?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 2ம் கட்டமாக விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோனோருக்கு ரூ. 1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது... மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாள்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்றுடன் 45 நாட்கள் முடிவடைகிறது.. இதனால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட உள்ளன.. இது மிகுந்த எதிர்பார்ப்பை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மற்றும் சொந்த வீடு, கார் உள்ளிட்டவை இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.. இப்போதைக்கு 1.14 கோடி குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின்
இப்படிப்பட்ட சூழலில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை 15ம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்த துவங்கியது..
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சிறுபான்மையினர் துறை, வருவாய்த்துறை என 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சேவைகளை மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இந்த முகாம்கள் வாயிலாகவே பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டது.
குறிப்பாக, தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய சேவைகளை இம்முகாம்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது..
ரூ.1000 எப்போது
அதேபோல, ரூ.1000 பெரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேர எண்ணுபவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும், உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள், ஏற்கெனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அத்துடன் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் இந்த விண்ணப்பங்கள் மீதான முடிவு தெரிந்துவிடும் என தமிழக அரசு உறுதியளித்தது.. இதன்காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
அந்தவகையில், இம்முகாம்களில் மகளிர் உரிமைத் தொகையை கேட்டு, சுமார் 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருக்கிறார்களாம்..
இன்றுடன் 45 நாட்கள் நிறைவு
இந்த திட்டம் தொடங்கப்பட்டு வரும் இன்று 28ம் தேதியுடன் 45 நாட்கள் நிறைவடைகிறது.. இந்த விண்ணப்பங்களின் மீதான பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான விவரங்கள்தான் இன்று அதாவது ஆகஸ்ட் 28ம் தேதி முதல் தெரிவிக்கப்பட உள்ளது.
இதில், தகுதி வாய்ந்த விண்ணப்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது... எனவே அடுத்த சில நாட்களில் முதல் கட்ட பயனாளிகளின் லிஸ்ட்டும் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று சமீபத்தில் திருப்பத்தூரில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதியன்று அதிகாரப்பூர்வ விரிவாக்கம் நடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று நடக்கும் முகாம்கள்
இதனிடையே, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. மணலி மண்டபம் 2, மாதவரம் மண்டலம் 3, ராயபுரம் மண்டலம் 5, திருவிக நகர் மண்டலம் 6, அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), தேனாம்பேட்டை(மண்டலம்-9),கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10),வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), அடையாறு மண்டலம் (மண்டலம்-13) முகாம் நடைபெறுகிறது
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது"












Click it and Unblock the Notifications