கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. இதென்ன தேர்தல் அச்சாரத் தொகையா? போதும் முதல்வரே: கேள்வியுடன் வந்த பாஜக
சென்னை: திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா? ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் 'தகுதியற்றவர்கள்' என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் “மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்” என சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன.

மகளிர் உரிமைத்தொகை
அந்தவகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” எனக் கூறிய திமுக, அரியணையில் அமர்ந்ததும் “தகுதியானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை” எனப் பாதிப் பெண்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது.
’
நாக்கில் நரம்பின்றி
பஸ்சில் இலவசமாகப் பயணிக்கும் பெண்களை “ஓசி” எனவும், மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களை “ரூ.1000ல் கிரீம், பவுடர்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க” எனவும், உரிமைத் தொகை வரவில்லை என முறையிடும் பெண்களை “மெண்டல்கள்” எனவும் நாக்கில் நரம்பின்றி வசைபாடும் திமுகவினர், நகைச்சுவை என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை மட்டம் தட்டுவதையும், உருவக்கேலி செய்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்? என்றும் காட்டமாக நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்-அமைச்சரே? என்று மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு, 2023ம் ஆண்டு வரை கிடப்பில் போட்டது ஏன்? 30 மாதங்கள் வழங்காமல், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கியது ஏன்?
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி மீண்டும் மீண்டும் தமிழக மகளிரை ஏமாற்ற முயற்சிப்பது ஏன்? மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா?
ஆயிரம் ரூபாய் - திராவிட மாடல்
தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைத் தொகையைப் பெற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கால்கடுக்க நின்று மனு அளித்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா? ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் 'தகுதியற்றவர்கள்' என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா?
இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரீகமாக விமர்சித்து திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? சரி, தங்கள் கணக்குப்படி, தகுதியுள்ளவர்கள் என்று வகைப் படுத்தப்பட்ட மகளிருக்கு 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்காமல் விட்ட உரிமைத் தொகையான ரூ.30,000 கடனை எப்போது தான் அடைப்பீர்கள்?
போதும் போதும் முதல்வரே!
ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கடந்த நான்காண்டுகளில் பல்லாயிரம் முறை ஏமாற்றிய உங்களை இனி ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என்று காட்டமாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications