ஒரு வார போராட்டம்.. கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்ம மரணம் அடைந்த 12 ஆம் வகுப்பு மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மரணம்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

கலவரம்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீசாரும் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மறு பிரேத பரிசோதனை
இது தொடர்பாக 108 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நேற்று மறு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மறுகூராய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் உடன் இருக்க அனுமதி வழங்குமாறு பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
Recommended Video

பெற்றோர் சம்மதம்
இதற்கு உயர்நீதிமன்றம் சம்மதிக்காததால் அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றமும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு வாரமாக மாணவியின் சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நீண்ட பேச்சுவார்த்தையின் முடிவில் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகல் 2 மணிக்கு மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இறுதிச்சடங்குகள் சொந்த ஊரில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications