கமலும், ரஜினியும் தம்பிகளுக்கு வழி விட வேண்டும்.. விஜயின் அரசியல் பிளானை மறைமுகமாக பேசிய எஸ்.ஏ.சி!
ஆண்டது போதுமென நினைத்த பின் உங்கள் தம்பிகளுக்கு வழிவிடுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்திற்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆண்டது போதுமென நினைத்த பின் உங்கள் தம்பிகளுக்கு வழிவிடுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்திற்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜயை மனதில் வைத்து அவர் இப்படி பேசியதாக கூறுகிறார்கள்.
நேற்று கமல் 60 நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலர் அரசியல் ரீதியான கருத்துக்களை பேசினார்கள். மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி இதற்காக நேற்று விழா எடுக்கப்பட்டது.
பல முக்கியமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு கமல்ஹாசனின் திரைப்பயணம் குறித்து பேசினார்கள். சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இந்த விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்தது.

வரலாம்
இந்த விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரலாம். தமிழகத்தில் அது வழக்கமாக நடப்பதுதான். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வர கூடாதென்று சிலர் சொல்கிறார்கள். அது பெரும் தவறு. தமிழக அரசியல் தலைவர்கள் பலர் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான்.

வரலாறு
அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் சினிமா மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். அதன்பின் அரசியலுக்கு வந்தனர். பின் தமிழக முதல்வராகவும் ஆனார்கள். அதேபோல் தற்போது கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்துவிட்டார்.

கமல் துணிச்சல்
அவர் துணிச்சலாக இறங்கிவிட்டார். இது சாதாரண விஷயம் கிடையாது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவரின் கோடான கோடி ரசிகர்கள் அந்த நாளுக்காக காத்து இருக்கிறார்கள்.

மக்கள் எதிர்பார்ப்பு
கமலும் ரஜினியும் சேர்ந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது தமிழர்களுக்கு நல்லது. அவர்கள் தமிழகத்தை சிறப்பாக வழி நடத்துவார்கள். அந்த நாளுக்காக நான் காத்து இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக சிலர் இருக்கிறார்கள். அவர்களை பின்னால் இருந்து குத்த சிலர் முயற்சி செய்வார்கள்.

நான் பார்த்துக் கொள்வேன்
ஆனால் அவர்களை நான் பின்னால் இருந்து பார்த்துக் கொள்வேன். ஆனால் ரஜினியும் கமலும் ஆண்டது போதுமென நினைத்தால் அரசியலில் இருந்து விலக வேண்டும். நீங்கள் ஆண்ட பின் உங்கள் தம்பிகளுக்கு வழி விட வேண்டும், என்று எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள் வைத்தார்.

விஜய் அரசியல்
இதன் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய்காக இப்படி பேசி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வர சில வருடங்கள் முன் முயன்றார். தற்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தும் விஜய் இன்னும் சில வருடங்களில் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications