வரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன்... திருமாவளவன் பேட்டி
சென்னை: வரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் 2 தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை என்றார்.

சரித்திர உண்மை
ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும் என்றார். மேலும், உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும் என்றும் எதிர்ப்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக பேசினார்.

பாராட்டுகிறேன்
இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில்: ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலாக பேசி இருக்கிறார். அதை வரவேற்று பாராட்டுகிறேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல.

பேச வைத்துள்ளனர்
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த முதல் பயங்கரவாத நடவடிக்கை காந்தி படுகொலையாகும். அதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்றார். மேலும், கோட்சே வாழ்க, காந்தி ஒழிக என்று அண்மையில் உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபையை சேர்ந்த ஒரு பெண்மணி முழக்கமிட்டார். காந்தி படத்தை பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் கமல்ஹாசன் போன்றவர்களை பேச வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம்
ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என்று வேதாந்தம் பேசுகிறார் மோடி. இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை நிறுவி இருக்கிறார் மோடி . அந்த பட்டேல் தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று சொன்னவர். அவர் காலத்தில்தான் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

நடவடிக்கை அவசியம்
தன்னுடைய பதவிக்கான பொறுப்பை உணர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக தெரியவில்லை. இதிலிருந்து அ.தி.மு.க.வும் சங்பரிவார் அமைப்பின் ஒன்றாக மாறி வருகிறது என்பதை அறிய முடிகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications