யூடர்ன் பண்ணி.. டிவியை உடைச்சு! ஒருவழியாக இடத்தை பிடித்த கமல்ஹாசன்! டெல்லிக்கு டிக்கெட் போட்ட திமுக!
சென்னை: அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று என மய்ய அரசியலை முன்வைத்து கட்சி ஆரம்பித்தவர் கமல்ஹாசன். அடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து டிவி ரிமோட்டை எல்லாம் உடைத்தவர். தற்போது முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக போகிறார். அதிமுகவை விட திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்தவர், தற்போது அந்த கட்சியின் தயவாலேயே டெல்லி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகச் சிறந்த நடிகர் என்றால் நிச்சயம் அது கமல்ஹாசன் தான். அதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்கப் போவதுமில்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன உதவி, இயக்குனர், துணை இயக்குனர், நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், பாடலாசிரியர் என திரைத்துறையில் கமல்ஹாசன் கால் வைக்காத இடமே கிடையாது.
அதே நேரத்தில் சமூகம் சார்ந்த பார்வையும் கமல்ஹாசனுக்கு அதிகம் கடந்த காலங்களில் தனது ரசிகர் மன்றம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்திருக்கிறார். இதற்கிடையே அதிமுக ஆட்சிக்காலத்தில் கமல்ஹாசனின் படங்களுக்கு பிரச்சனைகள் வரத் தொடங்கியது. மேலும் திமுகவும் கமல்ஹாசனுக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுத்தது.

இந்த் நிலையில் அரசியலில் குதிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்தார். மதுரையில் பிரம்மாண்ட மாநாடு மூலமாக கமல்ஹாசனின் கட்சி அரசியலில் குதித்தது. இடதுமில்லை வலதும் இல்லை மய்ய அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த பொழுது பிரபலங்கள் அவரது கட்சியில் சேர்ந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் அடிக்கடி ஆலோசனை என அதிரடி காட்டிய கமல்ஹாசன், அதற்கு பிறகு லெட்டர் பேடு கட்சியைப் போல அறிக்கையை விடுவதோடு நிறுத்திக் கொண்டார்.
தொடர்ந்து தேர்தல்களை தவறான கூட்டணியால் படுதோல்வி கிடைத்தது. தொடர்ந்து சோர்வடைந்த நிர்வாகிகள் திமுக உள்ளிட்ட கட்சிகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனை தவிர கட்சியில் யாருமே இல்லை என்ற நிலை இருந்தது. இடையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்து தீவிரவாதம் என பேசியது, கலைஞரை அசிங்கப்படுத்த ஸ்டாலின் என்ற பெயரே போதும் என்றது, பிரச்சார வீடியோவில் ரிமோட் மூலம் டிவியை உடைத்தது என சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
ஒரு கட்டத்தில் கட்சி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்த போது திடீரென காங்கிரஸ் உடன் நெருக்கம் காட்டினார் கமல்ஹாசன். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின் போது அவரை சந்தித்து பேசினார். தொடர்ந்து ராகுல் காந்தியும் கமல்ஹாசன் உடன் நெருக்கம் காட்டினார். தேசிய அரசியலில் கமல்ஹாசன் கலந்து விடப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென திமுகவுடன் நெருக்கம் ஏற்பட்டது. பல சமயங்களில் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த அவர் விக்ரம் படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டபோது அந்த நெருக்கம் மேலும் அதிகமானது.
தம்பி என உதயநிதி ஸ்டாலினை கொண்டாடியவர், அதற்கு பிறகு ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டினார். மக்களவைத் தேர்தல் வந்த போது பத்து தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அதற்கு ஈடாக மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றாலும், மாநிலங்களவை தேர்தலில் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. இந்த அடிப்படையில் தற்போது ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நான்கில் ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்திருக்கிறது.
கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் காங்கிரஸ்க்கும், மதிமுகவுக்கும், விசிகவுக்கும் தராத வாய்ப்பை கூட்டணியில் சேர்ந்த ஒரே ஆண்டில் கமல்ஹாசனுக்கு வழங்கியிருக்கிறது திமுக. கடந்த காலங்களில் அதிமுகவை விட திமுகவை தான் கமல்ஹாசன் அதிகம் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக ஸ்டாலின் பேச்சு, நடவடிக்கைகள், அவரது அரசியல் ஆகியவற்றை குறி வைத்து கமல்ஹாசனின் அட்டாக் இருந்தது. இந்த நிலையில் அதையெல்லாம் விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு டெல்லி செல்ல வாய்ப்பு அளித்திருக்கிறது திமுக தலைமை. இது திமுகவுக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஸ்டாலின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டதாகவே சொல்கின்றனர் உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications