வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.. மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதுதான் கம்பர் கண்ட கனவு என்று சென்னை கம்பன் கழக பொன் விழா நிறைவு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தச் சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவாக அறிஞர்கள் பலரும் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதைப் பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கூறினார். தொடர்ந்து விருதுபெற்ற பலருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கம்ப ராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில்பார்த்த இயக்கம் திராவிட இயக்கம். "நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேருவது கடல்தான், அதுபோல், வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்" என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
1989-ஆம் ஆண்டு இதே கம்பன் கழக விழாவில் உரையாற்றிய தலைவர் கலைஞர் அவர்கள், "கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம் வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டார்.
"வண்மை இல்லை. ஓர் வறுமை இன்மையால்" என்று கம்பர் சொன்னார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு.
இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
விருதுகள் பெற்ற எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் சொல்லி, கம்பன் கழக விழாக்களை மிகச்சிறப்பாக நடத்தி வரும் திராவிட ஆழ்வார் ஜெகத்ரட்சகனையும் மனதார பாராட்டி விடைபெறுகிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications