எதிர்பார்க்காத கனிமொழி! நெகிழ வைத்த ஆதரவாளர்கள்! 54-வது பிறந்தநாள் ரவுண்ட் அப்!
சென்னை: திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் 54-வது பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.
ஆதரவாளர்கள் இந்த அளவுக்கு தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூற வருவார்கள் என எதிர்பார்க்காத கனிமொழிக்கு, பெரிய மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்ததாம்.
இதனிடையே 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் கனிமொழியை அவரது சிஐடி காலனி இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்கள்.

கனிமொழி பிறந்தநாள்
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.யின் 54-வது பிறந்தநாளையொட்டி சென்னை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. காலை 7 மணிக்கெல்லாம் தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்ற கனிமொழி, சட்டமன்றத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

கோபாலபுரம் இல்லம்
அதைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற கனிமொழி, அங்கு கருணாநிதி புகைப்படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கடுத்து மீண்டும் தனது சிஐடி காலனி இல்லத்துக்கு திரும்பிய கனிமொழி, வீட்டிற்கு வெளியேயே நின்று கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம் என நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளால் கனிமொழி இல்லம் அமைந்துள்ள தெருவே திருவிழாக் கோலத்தில் காட்சியளித்தது.

கனிமொழி இல்லம்
இதனிடையே சட்டமன்ற கூட்டம் முடிந்த பின்னர் முதல் ஆளாக கனிமொழியை சந்திக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிஐடி காலனி இல்லத்தில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், மனோ தங்கராஜ், என 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார்கள். இதுமட்டுமல்லாமல் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த திமுக முக்கிய நிர்வாகிகள் பலரையும் கனிமொழி இல்லத்தில் காண முடிந்தது.

திருச்சி சிவா மகன்
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா கனிமொழியுடன் நின்று வாழ்த்துக் கூற வந்தவர்களை வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தார். இதனிடையே கனிமொழி எம்.பி.க்கு நாட்டுப்புற கலைஞர் ஒருவர் துடும்பு தாளம் ஒன்றை பிறந்தநாள் பரிசாக கொடுத்ததுடன் அதை இசைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று துடும்பு தாளத்தை இசைத்த கனிமொழி, கொரோனா பரவலை காரணம் கூறி வாழ்த்துக் கூற வருபவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கனிமொழி மூலம்
ஆனாலும் கனிமொழியின் இல்லம் முன்பாக கூட்டம் ஓய்ந்தபாடில்லை. இதையடுத்து கொரோனா பரவலை சுட்டிக்காட்டி மேலும் தனக்கு வாழ்த்துக் கூற வருவதை தவிர்க்குமாறு தனது டிவிட்டர் பக்கம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கனிமொழி மூலம் சீட் வாங்க வேண்டும் என்பதில் பலரும் ஆர்வமாக இருந்ததை அறிய முடிந்தது.












Click it and Unblock the Notifications