காவி கொடியை ஏற்றுவதுதான் இனி தேசியமா? அதுதான் இனி தேசிய கொடியா..? ட்விட்டரில் கனிமொழி எம்.பி ஆவேசம்!
சென்னை : தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, தேசிய கொடியை அவமதிக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது இனி இதுதான் தேசியம், தேசிய கொடி எல்லாம் என்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மாதம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பிரச்சனை உருவானது. அங்குள்ள அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் அமர கூடாது என கல்லூரி நிர்வாகம் கூறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.

ஹிஜாப் விவகாரம்
நாளுக்கு நாள் இந்த விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் வன்முறையும் வெடித்துள்ளது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு இந்த விவகாரம் பரவி வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் விவகாரம் தற்போதைக்கு முடிவடைவதாக தெரியவில்லை.

மீண்டும் சர்ச்சை
உச்சகட்டமாக இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த இந்துத்துவ மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறினர். உடனே வெகுண்டெழுந்த அந்த மாணவி அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் உச்சகட்ட பரபரப்பாக கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

தேசிய கொடி அவமதிப்பு
கல்லூரி வளாகத்தில் இருந்த தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்த கம்பத்தில் ஏறிய மாணவர் ஒருவர் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவி கொடியை பறக்க பட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது.

கனிமொழி கண்டனம்
இந்த நிலையில் தேசியக்கொடியை இறக்கி விட்டு காவிக் கொடி ஏற்றப்பட்ட சம்பவத்திற்கு திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," தேசிய கொடியை அவமதிக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது இனி இதுதான் தேசியம், தேசிய கொடி எல்லாம் என்பார்களா?:, என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications