கலைஞர் 100 வினாடி வினா! 2,25,718 பேர் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்பு! முதல் பரிசு ரூ.10 லட்சம்!
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் நடைபெறும் 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டியின் இணையவழி சுற்று நிறைவு பெற்றது.
திமுக மகளிர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில் 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டி நடைபெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் இந்த வினாடி வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டியின் இணைய வழி சுற்று நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டு இதுவரை 1,76,000க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்துள்ளன. மேலும், 2,25,718க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விளையாடினர். 11,30,897 பேர் www.kalaignar100.co.in இணையதளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர்.
முதல் சுற்று இணைய வழி வினாடி வினா கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வினாடி வினா போட்டி நடத்தப்படும். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும்.
மண்டலத்தின் வெற்றியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெற உள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இரு பிரிவுகளிலும் 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications