மேகதாது அணை! கர்நாடகா காங்கிரஸுக்காக தமிழக உரிமையை விட்டு கொடுக்க முடியாது! செல்வப்பெருந்தகை
சென்னை: கர்நாடகாவில் உள்ள காங்கிரஸும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸும் வேறு வேறு. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா மாநில மக்களுக்காக அந்த மாநில காங்கிரஸும், தமிழக மாநில மக்களுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியும் போராடுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: எங்கள் நிலைப்பாடு தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது, விவசாயகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது. தமிழகத்திற்காக போராடுவது என்பதுதான் தமிழக காங்கிரஸ் பேரியக்கத்தின் பணியாக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை கொடுத்திருக்கிறது, சில வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தற்போது கர்நாடகாவில் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து காவிரி பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள். அது போல் தமிழகத்தில் மக்களின் நலனுக்காக , விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காக எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு பின்புலமாக இருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். எப்படி அண்டை மாநிலங்களில் மாநில பிரச்சனை என வரும்போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என ஒற்றுமையாக இருந்து குரல் கொடுக்கிறார்களோ அது போல் தமிழகத்திலும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.
தமிழக நலன்தான்
இதில் தமிழகத்தின் நலன்தான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் திட்ட அறிக்கை தயார் செய்வதாக வரும் தகவல்கள் தவறானது என துரைமுருகன் மறுத்திருக்கிறார். அப்படி தவறான தகவலாகத்தான் இருக்க வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
நீதிமன்றத்தின் அனுமதி
நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது என பலமுறை சொல்லியிருக்கிறோம். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுடன் திமுக அரசு சமாதானமாக போவதாக எடப்பாடி பழனிசாமி சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை. "எஸ்ஐஆர்" விவகாரத்தில் கூட தமிழகத்தில் எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதிமுக எதிர்க்கவில்லை.
தமிழக உரிமை
தமிழகத்தின் உரிமைக்காக அவரை நிற்க சொல்லுங்கள். எங்கள் மாநிலத்தின் உரிமை எங்களுக்கு முக்கியம். கர்நாடகா மாநில உரிமை அந்த மாநில காங்கிரஸுக்கு முக்கியம். எங்க மாநில மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம். அவர்களது மாநில மக்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள்.
ஒரே காங்கிரஸ் கிடையாது
இதில் கர்நாடகா காங்கிரஸும் தமிழக காங்கிரஸும் ஒரே காங்கிரஸ் கிடையாது. தமிழக காங்கிரஸ் தமிழக மக்களுக்காக போராடும், குரல் கொடுக்கும். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுடன் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா மாநில அரசு சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி நீர் பகிர்வு
காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம், காவிரி நீர் பகிர்வு குறித்த நிலைமைகள், தமிழக விவசாயிகளின் ஆயுள் வாழ்வாதாரம் ஆகியவற்றை முழுமையாக புறக்கணிக்கும் வகையில் இந்த அனுமதி அமைந்துள்ளது. தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், சுற்றுச்சூழல் சமநிலை, தமிழகத்தின் சட்டபூர்வமான பங்கு ஆகிய அனைத்தும் ஆபத்துக்கு உள்ளாகும் நிலையில், மேகதாது அணை திட்டம் எந்த வகையிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடாது என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெளிவாக வலியுறுத்துகிறது.
நீர் பங்கீடு
தமிழகத்தின் நீர் பங்கீட்டினை குறைக்கும் எந்த முடிவையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இந்த முடிவு தமிழக விவசாயிகளின் நம்பிக்கையை மட்டுமே பாதிக்காமல், இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பகிர்வு அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது.
சட்ட போராட்டம்
இச்சூழ்நிலையில், தமிழகத்தின் உரிமைகளை காக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டியுள்ள குறிக்கோள்கள் மற்றும் முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் முன்வைத்து, மேகதாது அணை திட்டத்தை தடுக்க அரசோடு இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் சட்டபோராட்டம் நடத்த என்றும் உறுதுணையாக நிற்கும்.
விவசாய உரிமை
தமிழகத்தின் நீருரிமை, விவசாய உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை எந்த விலையையும் கொடுத்து காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விஷயத்தில் தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசும் உரிய தலையீடு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications