பால் விலை- தமிழக பாஜக இன்று போராட்டம்- கர்நாடகா பாஜக அரசை பதற வைக்குது அதே பால் விலை பஞ்சாயத்து!
சென்னை: கர்நாடகாவில் நந்தினி பால் விலை லிட்டருக்கு ரூ3 உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கர்நாடகா மாநில ஆளும் பாஜக அரசோ, இந்த பால் விலை உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும் வரும் 20-ந் தேதிக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு அண்மையில் அமலுக்கு வந்தது. ஆவின் நிறுவனத்தின் பிரீமியம் அல்லது ஆரஞ்சு பாக்கெட் பால், ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யவில்லை.

இன்று பாஜக போராட்டம்
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து 1,200 ஒன்றியங்களிலும் இன்று போராட்டம் நடத்துகிறது பாஜக. அதாவது தமிழகம் முழுவதும் பாஜக இன்று பால் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது.

கர்நாடகா நிலவரம்
இந்நிலையில்தான் கர்நாடகா பாஜக அரசை நேற்று தூங்கவிடாமல் செய்திருக்கிறது பால்விலை உயர்வு விவகாரம். கர்நாடகாவில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்பது உற்பத்தியாளர்களின் கோரிக்கை. ஆனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பால் விலை உயர்வை அமல்படுத்தி மக்களின் அதிருப்தியை சந்திக்க வேண்டாம் என கணக்குப் போட்டு தாமதித்தது ஆளும் பாஜக அரசு.

திடீர் விலை உயர்வு
ஆனால் கர்நாடகா பால் கூட்டமைப்பானது நேற்று திடீரென பால் விலை உயர்வை அறிவித்தது. இதன்படி நம்மூர் ஆவினைப் போன்ற கர்நாடகாவின் நந்தினி பால் விலை 1 லிட்டருக்கு ரூ3 உயர்த்தப்பட்டது. கர்நாடகாவில் நந்தினி 1 லிட்டர் பால் விலை ரூ37. இது ரூ40 ஆக உயர்ந்தது. கொழுப்பு நீக்கம் செய்யப்பட்ட பால் விலை ரூ38-ல் இருந்து ரூ41 ஆகவும் பசும்பால் விலை ரூ42-ல் இருந்து ரூ45 ஆகவும் உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் கர்நாடகா பால் கூட்டமைப்பு அறிவித்தது.

முதல்வர் பொம்மை
இதனால் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவை இந்த பால் விலை உயர்வு தந்துவிடும் என்பதால் உடனடியாக ஆலோசனை நடத்தினார் முதல்வர் பசவராஜ் பொம்மை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பால் விலை உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பால் கூட்டமைப்பினரிடம் கேட்டுள்ளோம். இது தொடர்பாக 20-ந் தேதிக்குப் பின்னர் முடிவெடுப்போம் என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடகா பால் கூட்டமைப்பினர் விலை உயர்வை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

என்ன செய்யும் தமிழக பாஜக?
தமிழகத்தில் இன்று பாஜகவினர் பால் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலத்தில் பால் விலை உயர்வு விவகாரம் ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழக அரசின் பால் விலை உயர்வுக்கு எதிரான பாஜகவின் போராட்டமும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications