ஒரு கிராமம் முழுக்க தங்கம்.. கர்நாடகாவில் இப்படியொரு ஊரா.. மக்களுக்கு ஜாக்பாட் தான்!
இந்தியாவில் தங்கம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கோலார் தங்க வயல் (KGF) தான். ஆனால், இப்போது கர்நாடகாவின் ஹாவேரி (Haveri) மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஒட்டுமொத்த இந்திய சுரங்கத் துறையின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
ஹாவேரி தாலுகாவில் உள்ள கணஜூரு கிராமத்தில் மிகபெரிய அளவிலான தங்க தாது படிமங்கள் இருப்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு அந்த பகுதி மக்களின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27 லட்சம் டன் தாது
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல தொழில்துறை ஆலோசனை நிறுவனமான 'ஸ்னோவ்டென் மைனிங் இண்டஸ்ட்ரி கன்சல்டன்ட்ஸ்' (Snowden Mining Industry Consultants), கணஜூரு கிராமத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டு ஒரு முக்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த ஆய்வின்படி, கணஜூருவில் உள்ள பன்னேகட்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 27 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சைடு மற்றும் சல்பைடு கனிமப் படிமங்கள் (Mineral deposits) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, இங்குள்ள ஒரு டன் கனிமத் தாதுவில் இருந்து தோராயமாக 3.40 கிராம் தங்கம் எடுக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தாதுக்கள் பன்னேகட்டா பகுதியின் நிலப்பரப்புக்கு சற்று கீழே, சுமார் 72 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கின்றன.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் விலகிய தடை
இந்த கனிம ஆய்வு அறிக்கை வெளியானவுடன், அங்கு தங்கச் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை டெக்கன் கோல்டு மைனிங் நிறுவனம் கோரியது. ஆனால், அப்போது அமலில் இருந்த சுரங்கச் சட்டங்களின் சில சிக்கல்கள் காரணமாக இந்த திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதனால் பல ஆண்டுகள் இந்த திட்டம் முடங்கிக் கிடந்தது.
ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சுரங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் (Supreme Court) தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்கு முந்தைய பழைய சுரங்க உரிம விண்ணப்பங்களுக்கு சாதகமாக வந்துள்ள இந்த தீர்ப்பு, கணஜூருவிலும் தங்கச் சுரங்கப் பணிகளைத் தொடங்குவதற்கான சட்டப் பூர்வமான வழியை எளிதாக்கியுள்ளது.
கணஜூருவில் தங்கம் எடுப்பது மிகவும் எளிதானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இங்கு தங்கம் பூமிக்கு மிக அருகிலேயே இருப்பதால், சிறிய அளவிலான திறந்தவெளி பள்ளங்களை தோண்டுவதன் மூலமே சுரங்கப் பணிகளைச் செய்துவிட முடியும்.
மேலும், இந்த கணஜூரு கிராமம் ஹாவேரி நகரில் இருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பகுதிக்கு மிக அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம் மற்றும் வரதா நதி (Varada river) ஆகியவை அமைந்துள்ளன.
சுரங்கத் தொழிலுக்குத் தேவையான போக்குவரத்து வசதி மற்றும் தண்ணீர் வசதி ஆகியவை மிக எளிதாகக் கிடைப்பதால், தங்கம் எடுப்பதற்கான செலவு கணிசமாகக் குறையும் என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த புதிய தங்கச் சுரங்கத் திட்டம் இந்தியாவின் உள்நாட்டு தங்கம் உற்பத்தியை அதிகரிப்பதோடு, உள்ளூர் மக்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications