டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கக் கூடாது! எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் வழக்கு
சென்னை: சென்னை மியூசிக் அகாதெமி சார்பில் டி.எம். கிருஷ்ணாவுக்கு, "சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது" வழங்குவதை நிறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருடைய பேரன் வி.சீனிவாசன் மனுதாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்குவோருக்கு சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது ஆண்டுதோறும் அவரது நினைவை போற்றும் வகையில் ஆங்கில நாளிதழ் குழுமம், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ரூ 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 98ஆவது மார்கழி மாத விழாவில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை டிஎம். கிருஷ்ணாவுக்கு வழங்குவது என்பது ஒரு நாத்தீகவாதிக்கு பக்தி விருதை வழங்குவதை போன்ற என சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் பெங்களூரை சேர்ந்தவர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தொடர்ந்துள்ளார். அதில் எனது பாட்டியை இழிவான, மோசமான, அவதூறு வார்த்தைகளை கூறிய டி.எம். கிருஷ்ணாவுக்கு சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்குவது பேரதிர்ச்சியாக இருக்கிறது. மலிவான விளம்பரத்திற்காக என் பாட்டியை விமர்சித்து வரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக் கூடாது.
கர்நாடக இசை உலகில் நம்பகத்தன்மையே இல்லாத ஒருவரை எப்படி எங்கள் பாட்டியின் பெயரிலான விருதை வழங்கி கவுரவிக்க முடியும்? என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஹைகோர்ட்டில் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவிற்கு மியூசிக் அகாதெமி பதிலளித்துள்ளது.
அதில் விருது பெறுபவரை தேர்வு செய்வதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. இந்த விருதானது 2005 ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்கி வருகிறது. இதற்கு மறைந்த பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சபனையும் இல்லை என தெரிவித்துள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டீக்கா ராமன், பாடகர் டி.எம்.கிருஷ்ணா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் சீனிவாசன் இந்த வழக்கு ஒரு முக்கிய உயிலை தாக்கல் செய்திருந்தார்.
1997 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி, எம்.எஸ். சுப்புலட்சுமி தனது உயிலில் "அறக்கட்டளை, டிரஸ்ட், நினைவிடம் உள்ளிட்டவை என் பெயரில் தொடங்கக் கூடாது. அது போல் என் பெயரில் எந்தவித பணத்தையும் டொனேஷனையும் வசூலிக்கக் கூடாது என்றும் அவரே தெரிவித்த உயிலை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.












Click it and Unblock the Notifications