திடீரென விஜய் உடன் கூட்டணி.. தவெக - காங்கிரஸ் கைகோர்த்தது ஏன்? கார்த்தி சிதம்பரம் முக்கிய விளக்கம்
சென்னை: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இப்போது தவெகவும் காங்கிரஸும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முதல்முறையாகக் கூட்டணி ஆட்சியை நோக்கி நகர்கிறது. இதற்கிடையே தேர்தலுக்குப் பிறகு தவெக உடன் இணைந்தது ஏன் என்பது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க மேலும் கூடுதலாக 10 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இதற்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளை தவெக தொடர்பு கொண்டுள்ளதாகத் தகவல் வெளியானது. நேற்றைய தினம் தவெகவுடன் கைகோர்க்கக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

திமுக கூட்டணியில் இருந்து விலகல்
இந்தச் சூழலில் தான் காங்கிரஸ் இன்று தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதாவது தவெகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் விலகியுள்ளது. காங்கிரஸின் விலகல் தொடர்பாக திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
கார்த்தி சிதம்பரம்
அதேபோல காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணி தொடர்பாக விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அதன்படி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இது தொடர்பாகக் கூறுகையில், "தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது அரசியலில் சாதாரணமான ஒன்று.
ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கூட்டணிகள் அமைவது மிகவும் சகஜம்.. சில நாடுகளில் நிலையான கூட்டணியை உருவாக்க மாதக்கணக்கில் கூட நேரமாகும். த.வெ.க ஒரு மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க விரும்புவதில் தெளிவாக உள்ளது. அவர்களின் அந்த முயற்சிக்குக் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
தவெகவுடன் கூட்டணி ஏன்
தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். இதுதான் மக்களின் முடிவாக இருக்கிறது. அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை.. உங்களுடன் ஓரிரு கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு நீங்கள் ஆட்சியை அமையுங்கள் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கூட்டணி அமைப்பது தொடர்பாக முதலில் தவெகவிடம் இருந்து எங்களுக்குக் கோரிக்கை வந்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிலைகளிலும் முறையான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.
நம்பர் கேம்
விஜய்யிடம் ஏற்கனவே 108 இடங்கள் உள்ளன. இப்போது காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், ஆதரவு எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 இடங்கள் மட்டுமே தேவைப்படும் சூழலில், அதற்கான முயற்சிகளிலும் விஜய் இறங்கியுள்ளார். இடதுசாரிகள், விசிக உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. காங்கிரஸின் ஆதரவு விஜய்க்கு ஒரு 'லைப் ஜாக்கெட்' போன்றது என்பதில் சந்தேகம் இல்லை












Click it and Unblock the Notifications