கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்
சிவகங்கை: "எனது இயற்பெயர் கருணாநிதி. என்னிடம் நிதி இல்லாததால் அதை விட்டுவிட்டு கருணாஸ் என பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனால், கருணாநிதி என்ற எனது பெயா்தான் மீண்டும் அரசியல் வாழ்க்கையை கொடுத்துள்ளது." என சிவகங்கையில் முக்குலத்தோா் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் பேசியுள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளன. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் உள்ள தனியார் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற முக்குலத்தோர் புலிப்படை கட்சி வேட்பாளர் கருணாஸ் பேசினார்.
கருணாஸ் பேசுகையில், "இந்தத் தொகுதியை இரு முறை பறி கொடுத்திருக்கிறோம். மூன்றாவது முறையாக அது போன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் மாபெரும் வெற்றி பெற்று அதை முதல்வர் ஸ்டாலினிடம் சமா்ப்பிக்க சபதம் ஏற்போம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆசியால் அரசியல்வாதியானேன். அவா் இறந்த பிறகு பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா். அதனால் அங்கிருந்து வெளியேறினேன்.
அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக பிரசாரம் செய்தேன். எனது இயற்பெயர் கருணாநிதி. என்னிடம் நிதி இல்லாததால் அதை விட்டுவிட்டு கருணாஸ் என பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனால், கருணாநிதி என்ற எனது பெயா்தான் மீண்டும் அரசியல் வாழ்க்கையை கொடுத்துள்ளது. அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்" எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications
