Exclusive: முதலில் இதைச் செய்யுங்க; பிறகு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்க; பொங்கும் கருணாஸ்!
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என அண்மையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இந்தக் கடிதம் எழுத வேண்டியதன் அவசியம் என்ன என்பது பற்றி அறியவும் ஜெய்பீம் திரைப்படம் உட்பட இன்னும் சில விவகாரங்கள் குறித்து அவரிடம் நாம் பேசினோம்.
அப்போது மனதில் தோன்றிய கருத்துக்களை மறைக்காமல் ஒன் இந்தியா தமிழிடம் கருணாஸ் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;

வன்னியர் இட ஒதுக்கீடு
''வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதன் மூலம் சீர்மரபினர் பிரிவில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படுவார்கள். 4 பேர் இருக்கக்கூடிய இடத்தில் ஒரு சட்டி சோற்றை வடித்து முக்கால் சட்டி சோற்றை ஒருவருக்கே கொடுத்துவிட்டு மீதமுள்ள கால் சட்டி சோற்றை 3 பேரும் பகிர்ந்து சாப்பிடச் சொல்வது முறையா என்பதை சிந்திக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்க, அந்த கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு சமுயாதத்திற்கும் இட ஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் கொடுங்க, யார் தடுக்கப் போகிறார்கள்.''

கேவியட் மனு
''வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் முத்துராமலிங்கம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக என்ன கோரிக்கை வைக்க வேண்டுமோ அதை கடிதம் மூலம் விவரமாக குறிப்பிட்டு முதலமைச்சருக்கு தெரியப்படுத்திவிட்டேன். இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து பேசும் திட்டமெல்லாம் எனக்கில்லை.''

நல்ல படம்
''ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரை ஒரு நல்ல படம், ஆனால் அதில் தேவையற்ற சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். நண்பர் சந்தானம் கூறியது போல், ஒருவரை உயர்த்துவதற்காக மற்றொருவரை இகழக்கூடாது என்பதை தான் நானும் சொல்கிறேன். அசுரன் திரைப்படத்தில் ஆண்ட பரம்பரை என்ற வசனம் சர்ச்சையை உருவாக்கியதால் இயக்குநரிடம் கூறி அதை எடுக்க வைத்தேன். ஒரு நல்ல படம் குறிப்பிட்ட அடையாளத்திற்குள் சிக்கிவிடக் கூடாது என நினைத்து உடனே நான் சொன்னதை செய்தார் இயக்குநர். அதுபோல் ஜெய்பீம் திரைப்படத்திலும் தேவையற்றவைகளை தவிர்த்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து''

கூடா நட்பு
''கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ அதிமுகவுக்கு பொருந்தும். ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக உரிமைகளை எடப்பாடி பழனிசாமி பறிகொடுத்தார். நீட் தேர்வில் தொடங்கி பல பிரச்சனைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும். எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக செய்த எந்த காரியமும் நிலைத்து நிற்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தை தேர்தல் அரசியலுக்காக அவசரம் அவசரமாக கொண்டு வந்தார் அதன் நிலை இன்று என்னவானது என அனைவருக்கும் தெரியும்.''

என்ன ஆனது?
''ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசியல் காரணங்களுக்காக அரசுடைமை ஆக்கினார், அதையும் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பாஜகவினர் கூட அப்படி பேசியிருக்கமாட்டார்கள் ஆனால் இவர் அப்படி பேசினார், அதன் நிலையும் இன்று என்னவானது என அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என இவர் செய்த காரியங்களால் அதிமுக இன்று எந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெரியுமா.''

வலிமையான தலைமை
''கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்த கோடிக்கணக்கான தொண்டர்கள் தான் வலிமையான தலைமை இல்லையே என வருந்தி தாய் இல்லா பிள்ளைகளாக நிற்கின்றனர். இதற்காக நான் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என எண்ண வேண்டாம். நான் தனியாக ஒரு அமைப்பு நடத்தி வரும் போது சசிகலாவை சந்தித்து பேசவும் ஆதரித்து பேசவும் எனக்கு அவசியமில்லை. வலிமையான ஒற்றைத் தலைமையையே அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.''

திமுக அரசு
''திமுக அரசு ஃபங்ஷன் ஆவது போலவே தெரியவில்லை. திமுகவின் ஆட்சி குறித்தும் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்தும் இப்போது பேச முடியாது. இன்னும் அதற்கு கால அவகாசம் தேவை எனக் கருதுகிறேன். நான் உழைத்தால் தான் எனக்கு காசு, யாரிடமும் நான் எதையும் எதிர்பார்த்து நிற்கப்போவதில்லை. என்னை நம்பி பத்து இருபது குடும்பங்கள் இருப்பதால் அமைப்பு பணிகளோடு சேர்த்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன்'' என மனதில் தோன்றிய கருத்துக்களை ஒளிவு மறைவின்றி தெரிவித்துள்ளார் கருணாஸ்.












Click it and Unblock the Notifications