சீமான் ஏன் பதறுகிறாரு.. கரூரில் பொய் கையெழுத்து வாங்குனது யாரு? அண்ணாமலை கேள்வி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தங்களுக்கே தெரியாமல் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக பலியானவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்களிடம் பொய் சொல்லி யார் கையெழுத்து வாங்கினார்கள் என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர், வேலுச்சாமிபுரத்தில் பிரசார பரப்புரை மேற்கொண்டார். அப்போது, விஜயைப் பார்ப்பதற்காகவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் சிறுவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில், சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை கடந்த வாரத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி கையெழுத்து வாங்கி வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அதேபோல, மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடமும் அதிமுகவினர் ஏமாற்றி கையெழுத்து வாங்கி வழக்குத் தொடர்ந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கி மனுதாரர்களாக சேர்க்கப்பட்டது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இதுதொடர்பாக, அவர்களிடம் பொய் சொல்லி யார் கையெழுத்து வாங்கினார்கள் என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆஜராகினார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் 41 குடும்பத்தினர். ஆனால், அவர்களுக்கு அதில் தெரியாமல் இரண்டு நபர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கி அவர்களையும் இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அந்த இரண்டு பேரிடம் பொய் சொல்லி யார் கையெழுத்து வாங்கினார்கள். அவர்களை யார் தவறாக வழிநடத்தியது என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பது மாநில தன்னாட்சிக்கு எதிராக இருக்கிறது என்று ஏன் சீமான் பதற்றப்படுகிறார் என்று தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications