கரூர்: விஜய்க்கு மட்டும் சிக்கல் இல்லை! 500 போலீஸாருக்கும் சம்மன்! சிபிஐ கையில் பந்தோபஸ்து பிளான்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் விஜய்க்கு மட்டும் நெருக்கடி இல்லை, அன்றைய தினம் பாதுகாப்பு பணியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்துவிட்டது.
இந்த நிலையில், அன்றைய தினம் களத்தில் இருந்த ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், "வேலுச்சாமிபுரத்தில் டிராபிக் கன்ட்ரோல் செய்தது யார்? பாதுகாப்புத் திட்டத்தில் குளறுபடி நடந்தது எப்படி?" என்ற கேள்விகளுடன் தினமும் 10 போலீஸார் வீதம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள். அன்றைய தினம் போலீஸார் தயாரித்து வைத்திருந்த பந்தோபஸ்து பிளான் இப்போது சிபிஐ கையில் சிக்கியிருக்கிறது.
நிலைமை இப்படி இருக்க, வரும் ஜனவரி 12-ஆம் தேதி ஒட்டுமொத்த தமிழகமும் டெல்லியை நோக்கித் திரும்பிப் பார்க்கப் போகிறது. ஆம்! த.வெ.க தலைவர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இதற்கு விஜய் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து விஜய் தரப்பினர் கூறுகையில், வரும் 12 ஆம் தேதி விஜய், சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். இதற்காக நாளை அவர் டெல்லிக்கு புறப்படுகிறார் என தெரிவித்திருந்தனர்.
வழக்கின் விவரம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரையின்போது துயரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, முதலில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், முறையான சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்குமாறு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்த விரிவான உத்தரவைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) அதிகாரிகள் கரூருக்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர்.
கடந்த சில வாரங்களாக கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணையை மேற்பார்வையிட, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டி.ஜி.பி.க்கள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகியோர் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கரூருக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வுக்குப் பிறகு, விசாரணையின் அடுத்த கட்டமாக பல்வேறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஸ் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்ட அனைவரும் டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகி, அங்கு மூன்று நாட்கள் விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகர் விஜய்யின் சமீபத்தியப் படமான 'ஜனநாயகன்', இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் தாமதமானது. படத்திற்கான 'யு/ஏ' சான்றிதழை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தணிக்கைக் குழு மேல்முறையீடு செய்ததால், படத்தின் வெளியீடு மேலும் ஒத்திவைக்கப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்கு விஜய் ஆஜராகவுள்ளது மற்றும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சிக்கல் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் அரசியல் மற்றும் திரையுலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications