“முதல் குற்றவாளி கரூர் எஸ்.பி தான்.. அவரை சஸ்பெண்ட் பண்ணி கைது பண்ணனும்".. விஜய்க்கு எச்.ராஜா ஆதரவு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்தில் முதல் குற்றவாளி கரூர் எஸ்.பி தான் என்றும் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் கரூர் செல்வதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்க தேவையில்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27 ஆம் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க தலைவர் விஜய் வரும் 17 ஆம் தேதி செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனுமதி கோரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காரைக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார் எச்.ராஜா. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா பேசுகையில், "தவெக தலைவர் விஜய் கரூர் செல்வதற்கு உரிமை உண்டு. அவர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு காத்திருக்க தேவையில்லை. அரசியலில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் செல்ல அடிப்படை உரிமை உள்ளது.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பை வழங்காதது காவல்துறையின் தவறு, இதில் முதல் குற்றவாளி கரூர் எஸ்.பி தான். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய எச்.ராஜா, "திமுக தொடர்ந்து மக்களை ஏமாற்றும் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. இதே போக்கு தொடர்ந்தால் 1991இல் நடந்தது போல, 2026 தேர்தலிலும் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள். 2026 மே மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்தார்.
மேலும், "ஆணவப் படுகொலைகள் பற்றி பேசும் திருமாவளவன்தான் ஆணவம் கொண்ட அரசியல்வாதி. சென்னையில் அவரது கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சம்பவத்தில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை அப்போதே முடிந்திருக்கும். அதேபோல், நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அரசு இந்த பிரச்சனையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, "உதயநிதிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி தான். கல்வி நிலையங்களில் சாதி வெறி அதிகரிக்க திமுக அரசே காரணம். தமிழ்நாட்டில் தெருப் பெயர்களில் சாதி பெயர்களை எடுத்தாலும், மக்களின் உணர்வுகளை மாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications