கரூர் கூட்டநெரிசல் வழக்கு: விஜய்யை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் சிபிஐ.. வெளியான பரபர தகவல்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. போலீசார், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவ்ர்கள், தவெக நிர்வாகிகள் என பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் வைத்தே அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. அப்போது விஜய்யை பார்க்க வந்த தவெக தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். நாட்டையே இந்த கூட்ட நெரிசல் சம்பவம் உலுக்கியது.

சிபிஐ விசாரிக்க உத்தரவு
இதற்கிடையே, அரசியல் கட்சிகள் நடத்தும் 'ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் சிலர் சிபிஐ விசாரணை கேட்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்தது.
போலீசார், மருத்துவர்களிடம் விசாரணை
இதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முகாம் அலுவலகம் அமைத்துள்ள சிபிஐ, கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் விசாரணை நடத்தி வருகிறது. போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
விஜய்யிடம் விரைவில் விசாரணை
அதேபோல, தவெக பொதுசெயலாளர் புஸ்சி ஆன்ந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தவெக தேர்தல் பிரசாரம மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அதேபோல, விஜய்யின் பிரசார பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள், பதிவுகளையும் சிபிஐ பெற்றுள்ளது.
கூட்ட நெரிசல் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் சாலையிலும் நவீன அளவீடு கருவிகளை கொண்டு சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில்தான், விஜய்யிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
சென்னையில் வைத்தே விசாரணை
விஜய்யிடம் விசாரணை மெற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், பிற தவெக நிர்வாகிகளை போல விஜய்யை கரூர் அழைத்து விசாரிப்பதில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால், விஜய்யிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் வழக்கில் விரைவில் விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications