கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. ஏ1 மதியழகன், ஏ2 ஆனந்த்.. சிபிஐ தாக்கல் செய்த எப்ஐஆர் விவரம் வெளியானது
கரூர்: விஜய்யின் கரூர் பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தவெக வழக்கறிஞர்களுக்கு, சி.பி.ஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கப்பட்டது. இதில், ஏற்கனவே கரூர் நகர போலீசார் குறிப்பிட்டது போல, ஏ1 ஆக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 ஆனந்த், ஏ3 நிர்மல் குமார் என்று சி.பி.ஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தனது மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தை மேற்கொண்டார். அந்த வகையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நாமக்கலில் பிரசார பயணத்தை முடித்துவிட்டு கரூருக்கு விஜய் சென்றார். விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. சென்னை உயர் நீதிமன்றம், அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்.ஐ.டி குழு விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது.
எப்.ஐ.ஆர் விவரம் வெளியானது
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, சி.பி.ஐ இந்த வழக்கின் விசாரணையை கையில் எடுத்தது. கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சி.பி.ஐ குழுவிடம், கரூர் டவுன் போலீசார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்.ஐ.டி குழு ஆவணங்களை ஒப்படைத்தது. இதன்படி சி.பி.ஐ தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த எப்.ஐ.ஆர் கரூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ விசாரணை அதிகாரியான ஏ.எஸ்.பி முகேஷ்குமார் தலைமையிலான டீம் இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளது. எப்.ஐ.ஆர் விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எப்.ஐ.ஆர் நகலை கேட்டு தவெக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவின் அடிப்படையில் தவெக வழக்கறிஞர்களுக்கு, சி.பி.ஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.
ஏ2 ஆனந்த், ஏ3 நிர்மல் குமார்
அந்த நகலில், ஏற்கனவே கரூர் நகர போலீசார் குறிப்பிட்டது போல, ஏ1 ஆக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 ஆனந்த், ஏ3 நிர்மல் குமார் என்று சி.பி.ஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் வேறு எந்த நபர்களின் பெயரும் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கரூர் நகர போலீசார் இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தவெக நிர்வாகி மதியழகன் மற்றும் பவுன் ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகிய இருவரும் கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவாகினர்.
ஜாமீன் கிடைத்தது
இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதையடுத்து, மதியழகன், பவுன் ராஜ் ஆகிய இருவருக்கும் கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கு விசாரணை சி.பி.ஐக்கு மாறியதும் தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் பொதுவெளியில் தோன்றினர். இத்தகைய சூழலில்தான் சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கரூர் நகர காவல் நிலையத்தில் குறிப்பிட்டது போலவே சி.பி.ஐ எப்.ஐ.ஆரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications