புஸ்சி, ஆதவ் சொன்ன அந்த வார்த்தை.. விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப இதுதான் காரணமா?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்ப புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா சொன்ன ஒரு வார்த்தை காரணம் என சொல்லப்படுகிறது. டெல்லி தலைமை அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜரானபோது அவர்கள் சொன்ன வார்த்தையின் அடிப்படையிலேயே விஜய்யிடம் விசாரணை நடத்த உள்ளனர் என கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 2 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தி வந்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இந்த கூட்டத்தின் போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமானது தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு கரூர் கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதனை தொடந்து இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். கரூர் கூட்ட நெரிசல் நடந்த வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
பின்னணி காரணம் என்ன?
பின்னர் அங்கு கடைகள் நடத்தியவர்கள், அப்பகுதி மக்கள், கூட்டத்தில் பங்கேற்றவர்கள், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என பலரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் தான் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. வரும் 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விஜய் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி இன்று விஜய் டெல்லி செல்கிறார். அங்கு தங்கிவிட்டு நாளை அவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளது. இந்த நிலையில் விஜய்யின் சிபிஐ விசாரணை செய்வதற்கு பின்னணி காரணங்கள் வெளியாகி உள்ளன.
புஸ்சி ஆனந்த், ஆதவ் சொன்ன வார்த்தை
அதாவது புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் சில கேள்விகளுக்கு தெரியாது என பதில் அளித்ததன் காரணமாகவே விஜய்யிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாம். முதலில் விஜய்க்கு சம்மன் அனுப்பும் திட்டத்தில் சிபிஐ இல்லை என கூறப்படுகிறது. தவெகவின் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்திய பிறகே சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாம்.
அதாவது சிபிஐ அதிகாரிகள் கேட்ட சில கேள்விகளுக்கு அவர்கள் 3 பேருமே தெரியாது என பதில் கூறியதனால் தான் விஜயிடம் பதில் கேட்பதற்காகவும், விஜய்யிடம் விசாரித்தால் மேலும் சில உண்மைகள் வெளிவரலாம் எனவும் கருதி சம்மன் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், கரூர் பிரச்சாரக் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது பற்றி கேள்வி கேட்பார்கள் என கூறப்படுகிறது.
விஜய்யிடம் நாளை விசாரணை
10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் விசாரணைக்கு டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications