கேமரா வெளிச்சம் கண்ணை மறைக்க.. ப்ளாப் ஆன விஜயின் ‘அரசியல்’ படம்! உங்களுக்கு CRPF.. ரசிகர்களுக்கு?
சென்னை: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் அரசியல் கட்சி கூட்டம் ஒன்றில் 41 பேர் உயிரிழந்திருப்பது கரூர் தமிழக வெற்றிக்கழக பிரச்சார கூட்டத்தில் தான். கேமரா வெளிச்சம் விஜய்க்கு கண்ணை மறைக்க, அறிவுறுத்தல்களை சற்றும் பின்பற்றாத தொண்டர்களின் ரசிக மனநிலையே இந்த பேராபத்துக்கு காரணம் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், நீதிமன்றம் என பல அமைப்புகளும் அறிவுரை வழங்கியும் அதனை கண்டு கொள்ளாததன் விளைவே இந்த துயர சம்பவம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெரும் ரசிகர் கூட்டத்தின் உற்சாகம் சில மணி நேரங்களுக்குள் உயிரிழப்பாக மாறி, 6 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட 38 பேரின் உயிரை பறித்தது. தற்போது 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது ஒரு "எதிர்பாராத விபத்து" எனக் கூறி கடந்து செல்ல முடியாது என்கிறார் அரசியல் விமர்சகர்கள். முன்னரே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், திடீர் தள்ளுமுள்ளு மற்றும் திட்டமிடல் குறைபாடுகள் காரணமாகவே இந்த துயரம் நிகழ்ந்தது என்பது அவர்களின் வாதம்.

விஜய் கூட்டம்
சனிக்கிழமை காலை 9 மணிக்கே தொடங்க வேண்டிய நாமக்கல் பிரசாரத்திற்காக மக்கள் அதிகாலையிலேயே கூடினர். ஆனால், நடிகர் விஜய் தனது பேச்சை பிற்பகல் 2.30 மணிக்கு மட்டுமே தொடங்கினார். 8 மணி நேரம் வெயிலில் காத்திருந்த மக்கள் மயக்கம் அடைந்தனர். அங்கு ஏற்பட்ட சிக்கல்களே கரூரில் நிகழ்ந்த பெரும் துயரத்திற்கான முன்னோட்டமாக இருந்தன. கரூரில் விஜய் மதியம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இரவு 7.40 மணிக்குத்தான் தோன்றினார்.
எம்.ஜி.ஆர்
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ரசிகர்கள் மரங்கள், கட்டடங்கள் மீது ஏறி நின்றனர். கிளைகள் முறிந்து விழுந்தன. தண்ணீர் வேண்டி கத்தும் ரசிகர்களுக்கு விஜய் தண்ணீர் பாட்டில்களை வீசிய சம்பவம் தள்ளுமுள்ளை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த காட்சிகள் திரைப்பட உலகில் பிரபலமான விஜயின் "தமிழக வெற்றிக் கழகம்" அரசியல் அமைப்பாக இன்னும் நிலை தடுமாறும் நிலையில் தான் உள்ளது என்பது பட்டவர்த்தாமாக தெரிந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் மக்கள், பல நாட்களாக காத்திருந்தாலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படவில்லை. காரணம், வலுவான அமைப்பு, பயிற்சி பெற்ற தொண்டர்கள், நுணுக்கமான கூட்ட மேலாண்மை.
அரசியல் பொறுப்பு
விஜயின் கட்சி இவை அனைத்தையும் புறக்கணித்து, திரைப்பட பிரச்சார முறைபோல் அரசியலையும் நடத்த முயற்சித்ததன் விளைவாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே, த.வெ.க. மனுவை விசாரித்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஷ்குமார் எழுப்பிய கேள்விகளை கவனிக்க வேண்டும். "பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும்.", "கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது யார்?" "அசம்பாவிதம் ஏற்பட்டால் பொறுப்பேற்பது யார்?" இப்போது இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது விஜய்தான் என அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
சிறப்பு பாதுகாப்பு
மத்திய அரசிடம் சிறப்பு பாதுகாப்பை கேட்டு பெற்ற விஜய், தனக்கென தனிப்படை வைத்திருப்பவர். ஆனால், தனது ரசிகர்களுக்கு அதே அளவு பாதுகாப்பு வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மேலும், 100 கோடியுக்கும் அதிகமாக சம்பளம் பெறும் நடிகர், உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ₹20 லட்சம் என நிர்ணயித்திருப்பது "உயிரின் மதிப்பு இதுதானா?" என்ற கோபக் கேள்வியை கிளப்பியுள்ளது.
கரூர் சோகம்
1996 முதல் 2002 வரை இந்தியாவில் நடந்த 3,935 கூட்ட நெரிசல்களில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அரசியல் பிரசாரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்தது விஜயின் கூட்டத்தில் தான். இது சாதாரணம் அல்ல, இது அரசியல் பொறுப்பின்மையின் தகுதியான சான்று. மக்களின் நம்பிக்கையுடன் விளையாடும் வகையில் பேரணிகளையும், பாதுகாப்பற்ற பொதுக்கூட்டங்களையும் நடத்தும் அரசியல் தலைவர்களை சட்டம் இனி சலுகை செய்யக்கூடாது. "திரை உலகின் ஹீரோ" என இருந்த விஜய், "அரசியல் தலைவராக" மாற விரும்பினால், முதலில் மக்களின் உயிரை மதிப்பதிலிருந்து தொடங்க வேண்டும் என்பது தான் அடிப்படை அறிவுரையே!












Click it and Unblock the Notifications