விஜய் மன்னிப்பு கேட்கனும்! முதல்வர் போலீஸ் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகனும்! பாஜக பிரசாத் கோரிக்கை
சென்னை: கரூர் உயிரிழப்புக்கு காரணமாக விளங்கும் நடிகர் விஜய் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு நிர்வாக ரீதியாக தார்மீக பொறுப்பேற்று காவல்துறை பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விலக வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய முறையில் நீதி கிடைக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதற்கான தொகையை தமிழக வெற்றி கழகம் தமிழக அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பாடமாக முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

கரூர் சோகம்
காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரீகத்துடன் தார்மீக பொறுப்பு ஏற்று உடனடியாக காவல்துறை பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். தமிழக காவல்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். மேலும் கரூர் மாவட்டத்தின் ஐ.ஜி, டி.ஐ.ஜி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.
தவெக
திருச்சியில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்தும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மிகப் பெரிய அளவு மூச்சு விட கூட முடியாமல் துன்பப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது குறித்தும் தேர்தல் கமிஷனுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் தமிழக பாஜக சார்பாக கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எந்தவித அரசியல் கட்சிகளும் கூட்டம், மற்றும் பிரச்சாரம் நடக்க அனுமதி கேட்கும் பொழுது, மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கூட்டம் மற்றும் பிரச்சாரம் நடத்த அனுமதி அளிக்கும் பொழுது, தேர்தல் கமிஷன் வகுத்துள்ள சட்ட திட்டங்களின் படி முறையான, உறுதியான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் குழந்தைகள் கலந்து கொள்வதை அனுமதிக்க கூடாது என்றும் தெளிவாக குறிப்பிட்டு முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் திமுக அரசின் தொடர் அலட்சிய ஆணவப் போக்கால், பாஜகவின் ஆலோசனையை புறந்தள்ளியதாலும் வழக்கமான முழுமையான நிர்வாக சீர்கேட்டின் காரணமாகவும் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது என்பதை தமிழக அரசு மறுக்க முடியாது.மறைக்க முடியாது.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் அவர்களை பொறுத்தவரை முதலமைச்சர் நாற்காலி கனவில், அவர் நடிப்பு அரசியலையும் விளம்பர அரசியலையும் மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறார் தன்னுடைய கூட்டத்திற்கு வரும் கட்சிக்காரர்கள் நலன், பாதுகாப்பு குறித்து எந்த விதத்திலும் அக்கறை கொள்வதில்லை என்பதை தமிழக வெற்றி கழகத்தின் விக்கிரவாண்டி பொதுக்கூட்டம் முதல் திருச்சி பொதுக்கூட்டம் வரை, அதேபோல் மதுரை தொடங்கி நாமக்கல் வரை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டது. நேற்றைய உயிர் எழுப்பு சம்பவத்திலும் கரூரில் கூடிய பாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல், தன்னுடைய ரசிகர்களுக்கு வரக்கூடிய அரசியல் கட்சியினருக்கு வரக்கூடிய ஆபத்தை பற்றி கவலைப்படாமல் அவர் செயல்பட்டதன் மூலம் நடிகர் விஜய் அவர்கள் ஒரு இந்த நிகழ்வின் ஒரு மன்னிக்க முடியாத குற்றவாளி என்பதை தான் மனசாட்சியுடன் உணர்ந்து தமிழக மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
அரசியல் உள்நோக்கம்
தமிழக காவல்துறை உடனடியாக நடிகை விஜய் அவர்களின் மேல் வழக்கு பதிவு செய்து நடிகர் விஜய் மற்றும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளாக உள்ள தமிழக வெற்றிக்கதை நிர்வாகிகளை கைது செய்து சட்டத்தின்படி அரசியல் உள்நோக்கம் இல்லாமல் உரிய நடவடிக்கையை எடுத்து தமிழக தமிழக மக்களின் கண்ணீருக்கும் உயிர் எழுப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நீதி வழங்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
இதேபோல் இந்த உயிர் இழப்பு சம்பவத்தில் அரசியல் பின்னணி, அரசியல் சதி இருக்கிறதா என்பதையும் கொங்கு பகுதியின், கரூர் மாவட்டத்தின் முடி சூடா மன்னனாக அறிவித்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை எல்லா விதத்திலும் நசுக்கி காட்டுவேன் என்று சூளுரைத்து செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்பு சம்பவம் நடந்த சமயத்தில் நடந்த பவர் கட் அரசியல், ஆம்புலன்ஸ் அரசியல் குறித்தும் முழுமையாக விசாரணை செய்து தமிழக அரசு தமிழக மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேக கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அமித்ஷா
உயிர் இழப்பு சம்பவம் நடந்த செய்தி வெளியான உடனே பாரத் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களுடைய இரங்கலை ஆறுதலை தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் மிகுந்த அதிர்ச்சி அடைந்து மிகுந்த அக்கறையுடன் தமிழக அரசிடம் நடந்து விவரங்கள் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் இந்த கொடிய சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், மத்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர்கள் குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிர்கள் பறிபோனது இல்லை . ஒரு அரசியல் கட்சித் தலைவராக விஜய் மிகப் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். குறித்த நேரத்திற்கு வராமல், தன்னை உயிராக நேசித்த கட்சி தொண்டர்களின் கூட்டத்தை தன்னுடைய சுயநல அரசியல் விளம்பரத்திற்காக, சினிமா செல்வாக்கை காட்டுவதற்காக, வேண்டுமென்று கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான திட்டமிட்ட நேரத்தை மாற்றி, காலம் கடந்து கலந்துகொண்டு, மிகவும் குறுகலான பகுதியில் நீண்ட நேரம் நின்று அலட்சியத்துடன் செயல்பட்டது இந்த உயிரிழப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதை விஜய் உணர வேண்டும். அதேபோல் தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு, குறிப்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனத்துடன் கண்காணித்து இருந்தால், காவல்துறை கண்காணிப்பாளர் திட்டமிட்டு முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் நிச்சயம் உயிரிழப்புகளை தவிர்த்து இருக்கலாம்.
எதிர்க்கட்சிகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை காவல்துறையின் காட்டாட்சி நடைபெற்ற வருகிறது. ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம் என்பதை காவல்துறை அனைத்து மட்டத்திலும் கடைபிடித்து வந்தது வெட்கக்கேடானது. எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் என்றால் முறையான பாதுகாப்பை காவல்துறை வழங்குவது இல்லை. வேண்டுமென்று அலட்சியத்துடன் செயல்படுவது கடந்த கால நிகழ்வுகளை ஆய்ந்து பார்த்தாலே தெரியும். அதுவே ஆளும்கட்சி என்றால் பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு மிகுந்த அக்கறையுடன் கூடுதல் வசதிகள் செய்து தரப்படுகிறது. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் பாரபட்சத்துடன் செயல்பட்டது இந்த உயிரிழப்புக்கு மிக முக்கிய காரணம். சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய ராணுவத்தின் போர் விமான ஒத்திகை நிகழ்ச்சியில் முறையான பாதுகாப்பு வழங்காததாலே 5 பேர் இறந்தனர். இதில் பாடம் கற்காத தமிழக அரசும் காவல் துறையும் தொடர் அலட்சியத்தால் தற்போது கரூரில் வரலாறு காணாத பெரும் உயிரிழப்பு நடந்துள்ளது.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசியல் சார்பற்று உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் அந்த குடும்பத்தின் தந்தை போல செயல்பட்டு பாரபட்சம் இன்றி அனைத்து விதமான நடவடிக்கைகளும் உரிய முறையில் எடுக்க வேண்டும். முழுமையான அனைத்து வித விசாரணைகளும் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக காவல்துறை அமைச்சர் பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகி புதிய காவல்துறை அமைச்சரை நியமிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications