அமித்ஷா கைக்கு சென்ற கணிப்புகள்.. விஜய்யை கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிப்பது ஏன்?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் முனைப்பு காட்டுவது ஏன் என்று பார்க்கலாம். அதிமுகவின் பாரம்பரிய வாக்காளர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கி இருப்பதால், தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக பார்க்கப்படுகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லியில் தேசிய விளையாட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறப்பட்டாலும், தனி விமானத்தில் கமாண்டோ பாதுகாப்புடன் சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இதனால் ஆதவ் அர்ஜுனா மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த சந்திப்புக்கு பின் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு உள்ளதாக என்ற கேள்விக்கு அமித்ஷா, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கு என்று தெரிவித்திருந்தார்.
தற்போது தவெக நிர்வாகி டெல்லியின் ஆதரவை பெறுவதற்காக சென்றிருப்பது அதற்கான சாத்தியங்களை அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தவெகவின் அரசியல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. திமுகவின் கொள்கைகள், ஆதரவுகள் என்று அத்தனையையும் தவெகவும் முன்னெடுத்ததால், திமுகவின் வாக்கு வங்கியை தவெக சேதப்படுத்தும் என்று கூறப்பட்டது.
ஆனால் களத்தில் திமுகவின் வாக்குகளில் பெரியளவில் சேதாரம் ஏற்படவில்லை என்று தெரிய வந்தது. மாறாக அதிமுகவின் வாக்குகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் தவெக பக்கம் சாய்வது தெரிய வந்தது. அதேபோல் சிறுபான்மை மக்களின் 90 சதவிகித வாக்குகள் திமுகவிற்கே கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதனால் அதிமுக - பாஜகவின் கணிப்புகள் முற்றிலும் எதிர்மறையாகிவிட்டதாக தெரிய வந்தது.
இதனை அமித்ஷாவும் தெரிந்தே வைத்திருக்கிறார். ஒவ்வொரு மாதமும் பாஜக தரப்பில் கருத்துக்கணிப்புகள் எடுத்து வருகிறது. அது அமித்ஷாவின் கைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் தவெகவை கூட்டணியில் இணைத்தால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு கூடுதல் சாதகம் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தவெக தொடக்கம் முதலே திமுகவை மட்டுமே தீவிரமாக எதிர்த்து வருகிறது. அதிமுக எதிர்பார்த்ததை போல் விஜய் பக்கம் எந்தக் கட்சிகளும் கூட்டணிக்காக பேசவும் இல்லை.
இதனால் டிசம்பர் மாதத்திற்கு பின் அதிமுக, பாஜக மற்றும் தவெக நெருக்கம் காட்டத் தொடங்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தவெக இணைந்தால் சுமார் 60 தொகுதிகள் வரை கொடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்பாக அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தையும் நடந்தது. தற்போது கரூர் விவகாரம் காரணமாக தவெகவும் கூட்டணி அமைக்கும் முனைப்பிலும், கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications