மொத்த ஃபார்முலாவும் நொறுங்கியது.. "இனி நமக்குள் பிரிவில்லை"! கேசி வீரமணியால் அதிமுகவில் பரபரப்பு
சென்னை: அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து, மீண்டும் கட்சி ஒரே குடையின் கீழ் திரண்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பினர் இடையிலான சமரசம் கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மீண்டும் எஃகு கோட்டையாக உருவெடுத்துள்ள அதிமுகவின் இந்த ஒற்றுமைப் பயணம் குறித்து விரிவாகக் காண்போம்..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. இந்த தோல்வியின் எதிரொலியாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன.

அதிமுக பரபரப்பு
இதையடுத்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் இன்னொரு அணியும் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது.
இந்த மோதல் போக்கு காரணமாக, சட்டமன்றத்தில் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் 2 துருவங்களாக செயல்பட்டனர்.. முக்கியமாக 25 எம்.எல்.ஏ.க்கள் வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்புக்கும், 22 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஆதரவாக வாக்களித்தது கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையும் சிதைத்தது.
மேலும் 2 தரப்பும் மாறி மாறி சபாநாயகரிடம் கொறடா உத்தரவை மீறியதாகப் புகார் அளித்தது, அதிமுகவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.. இருந்தாலும் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா வீடியோ
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஆற்றிய உரை இன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது..
அதில் "எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என ஜெயலலிதா முழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது..
'கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே என்று உணர்ச்சிகரமாகப் பதிவிடப்பட்டுள்ளது.
கேசி வீரமணி எடுத்த முயற்சி
இதேபோல் சிவி சண்முகம் இல்லத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், தாய் - பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகிவிட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.. இந்த நகர்வுகள் அனைத்தும், தேர்தல் தோல்வியால் உடைந்த அதிமுக மீண்டும் எஃகு கோட்டையாகத் திரண்டு எழுவதை அப்பட்டமாக உணர்த்துகின்றன..
ஆக மொத்தம் அதிமுகவின் இந்த மீள் ஒருங்கிணைப்பு என்பது ஒரு கட்சிக்குத் தேவையான ஆரோக்கியமான ஜனநாயக மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.. தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஒரு பேரியக்கம் சிதைந்து போவதை விட, பொதுவான இலக்கிற்காக தலைவர்கள் தங்களின் ஈகோக்களைத் தியாகம் செய்து ஒன்றிணைவது அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாகும்.
ஒன்றிணையும் அதிமுக?
அதிகார மோதல்களைக் கடந்து, தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மீண்டும் ஒரே குடையின் கீழ் அதிமுக திரண்டிருப்பது, வரும் காலங்களில் வலுவான எதிர்க்கட்சியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள உதவும்..
எஃகு கோட்டை என வர்ணிக்கப்படும் இந்த இயக்கம், தனது உட்பூசல்களைத் தவிர்த்து மக்களின் நலனுக்காக முழுமையாகச் செயல்படும்போது மட்டுமே, இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுத்து தமிழக அரசியல் களத்தில் தனது ஆதிக்கத்தையும் செலுத்த முடியும்..!!












Click it and Unblock the Notifications