விவசாயிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கணும்! வேளாண்துறை அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த அமைச்சர்!
சென்னை: விவசாயிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கியுள்ளார்.
மாவட்ட வேளாண்மை அதிகாரிகள், விற்பனைக்குழு செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்திய அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

விளைபொருட்களை சேமித்து வைத்து உயர்ந்த விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விற்பனை செய்திட ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 510 சேமிப்புக்கிடங்குகள் உள்ளன.
இவற்றின் மூலம் 3.75 இலட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டில் 29.24 இலட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் 127 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வசதிகளை பயன்படுத்தி நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், விவசாயிகளுடன் அலுவலர்கள் நல்ல தொடர்பில் இருந்திடவும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்திடவும், துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அனைத்து விற்பனைக்கூடங்களும், கழிவறைகளும் சுத்தமாகவும் தூய்மையாகவும் சிறந்த முறையில் பராமரித்திட துரித நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் முறையாக அழைத்து பேசி விளைபொருட்களை வேளாண்மை விற்பனைக்குழு மூலம் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுத்திடவும், ஒவ்வொரு கிராமசபை கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் இத்துறையின் செயல்பாடுகளை விளக்கிடவும், துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களான காய், கனிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் தற்போது தமிழ்நாட்டில் 183 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
உழவர் சந்தைகளில் வரத்தினை அதிகரித்திட தோட்டக்கலைத் துறையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைக்கவும், விவசாயிகளை பெரும் சந்தைகள், பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர்களுடன் ஒருங்கிணைக்கவும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடவும், 187குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சீரிய முறையில் பயன்படுத்திட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications