பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான்
சென்னை: உயிரிழந்தவர்களின் உடலை, இறுதி சடங்கு செய்யும் வரை பத்திரமாக பாதுகாப்பதில் ஃப்ரீசர் பாக்ஸ் எனப்படும், மின்சார குளிர்சாதன பெட்டிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஃப்ரீசர் பாக்ஸ் தொழில்நுட்பத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் flying squad நிறுவனத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது.
சாமானிய மக்கள் தொடங்கி, பிரபலங்கள் பலரின் இறப்பில், மரித்தோர் மாண்பை காப்பாற்றியிருக்கிறது flying squad. இந்நிலையில் இந்த அனுபவங்களை, ஒன் இந்தியா தமிழுடன் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் flying squad நிறுவனத்தின் சாந்தகுமார்.

"ஆரம்ப காலங்களில் உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாத்து வைத்திருப்பது என்பது பெரிய வேலை. தொடக்கத்தில் ஒரு ஐஸ் கட்டியை வைத்துவிட்டு, அதன் மேல் உடலை வைத்துவிடுவார்கள். இது அதிகபட்சமாக ஒரு நாள் மட்டுமே தாங்கும். இந்த நிலைமையை ஐஸ் பாக்ஸ்கள் மாற்றின. தொடக்கத்தில் இந்த ஐஸ் பாக்ஸ்கள்/ஃபரீசர் பாக்ஸ் பயன்பாட்டுக்கு வந்தபோது, கரண்ட் பாக்ஸுக்குள் உடலை வைத்தால் அந்த உடலில் உள்ள ஆவி எரிந்துவிடுமா? என்று கேள்வி எழுந்தது.
இந்த பாக்ஸ் பயன்படுத்த ஆரம்பிக்கறதுக்கே கிட்டத்தட்ட மினிமம் 3 வருஷம் ஆச்சு. எல்லாருமே பயந்தாங்க. ஒரு கரண்ட் பாக்ஸ்ல உடலை வச்சா.. உடனே நம்ம அந்த ஆத்மா எறிஞ்சிருமேன்னு பயந்தாங்க. கான்செப்ட் புதுசுனால அத அக்செப்ட் பண்ணல நிறைய பேர் யோசிச்சாங்க. அப்போ நான் அவங்க கூட இருந்து எல்லாத்தையும் செய்வேன். இப்போ நிலைமை மாறிடுச்சு. மருத்துவமனையில் தேதி குறித்துவிட்டால், ஐஸ் பாக்ஸுக்கு முன்பதிவு செய்துவிடுகிறார்கள்.
ஃப்ரீசர் பாக்ஸ் என்பது அடிப்படை. ஆனால், நாம் நினைத்தால் ஓர் இறப்பை இன்னும் கண்ணியப்படுத்த முடியும். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள், சொந்த ஊர் வர குறைந்தது 2 நாட்கள் ஆகும். அதுவரை, இறந்தவர்களின் உடலை பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இதற்கான சிறப்பு ஃப்ரீசர் பாக்ஸை நாங்கள் ரெடி செய்திருக்கிறோம். இப்படியான பாக்ஸ்களில் கம்பரசர் அளவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல் நிறம் மாறாது.
ஆனால், இப்போதெல்லாம் மார்ச்சுவரியில் வைத்துவிட்டு, உறவினர்கள் வந்த பின்னர், உடலை எடுத்து அடக்கம் செய்யும் சூழல் உருவாகிவிட்டது.
இருப்பினும் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டில் வைத்து, சடங்கு செய்து அனுப்புவதுதான் இந்திய கலாச்சாரம். அந்த வகையில், உயிரிழந்தவருக்கு மேலும் கண்ணியம் சேர்க்கும் விதமாக பெட்டிகளை நாங்கள் தயாரித்திருக்கிறோம். ஜெயலலிதாவை சந்தன பெட்டியில் வைத்தார்கள், தங்க பெட்டியில் வைத்தார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பவர்கள், தங்கள் சொந்தங்களின் உடலையும் அதேபோல அடக்கம் செய்ய விரும்புவார்கள். எனவே அதற்கேற்ப பெட்டியை நாங்கள் தயாரித்திருக்கிறோம்.
தற்போது இந்திய அளவில் மரணங்களை மக்கள் பார்க்கும் விதம் மாறியிருக்கிறது. தொடக்கத்தில் கைகளில் பாடை கட்டி உடலை கொண்டு போனார்கள். பின்னர், வண்டி கட்டி கொண்டு சென்றார்கள். இப்போது உயிரிழந்தவர்களின் உடலை பத்திரமாக எந்த தொந்தரவும் இல்லாமல் பத்திரமாக கொண்டுபோக விருப்பப்படுகிறார்கள். எனவே, காலம் வேகமாக மாறியிருக்கிறது. அதற்கேற்ப நாங்களும் மாற்றங்களை செய்திருக்கிறோம்.
நாங்கள் இப்போது செய்வது சேவைதான். ஆரம்பத்தில் நாங்கள் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய உடல்களை, உரிய காவல் நிலையங்களில் ஒப்படைக்கும் பணியை செய்து வந்தோம். அப்போதெல்லாம் பெரிய பாதுகாப்பு கவசங்கள் கிடையாது. ஆனாலும், சேவை மனப்பான்மையோடு நாங்கள் அதை செய்தோம். பின்னர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதை செய்தோம். இந்த சேவைக்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
தொடக்க காலத்தில் இந்த வேலையை செய்பவர்களுக்கு குடும்பம் எதுவும் இருக்காது. பிணம் தூக்குபவன் எப்படி மனைவியை வைத்து காப்பாற்றுவான் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், இன்று இந்த துறை பெரிய அளவுக்கு மாறியிருக்கிறது. கார்ப்ரேட் நிறுவனங்கள் உள்ளே வந்திருக்கின்றன. நாங்கள் மதிக்கப்படுகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசிய விவரங்களை அறிய, ஒன் இந்தியா தமிழுக்கு அவர் கொடுத்த பேட்டியை காணவும்.












Click it and Unblock the Notifications