கீழடி, கொற்கை ஆய்வு: இந்திய துணைகண்ட வரலாறு இனி தமிழ்நாட்டிலிருந்து துவங்கும்.. முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கீழடி, கொற்கை ஆய்வுகள் காரணமாக இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து துவங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் 2000 -2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கும் முடிவில் தமிழ்நாடு அரசு இருக்கிறது.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தொல்லியல் ஆய்வுகள் குறித்தும், கீழடி, கொற்கை நகரங்களின் பழமை குறித்தும் பேசினார். இந்த ஆய்வில் தற்போதைய முடிவுகள் குறித்தும், கீழடி நகரம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

ஸ்டாலின் பேச்சு
தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், மாமன்னர்கள் பலர் இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, தனிக்கொடையின் கீழ் ஆட்சி நடத்தி வந்த மண் தமிழ் மண். இதை எல்லாம் நான் இலக்கிய ஆதாரங்களை மட்டும் நான் சொல்லவில்லை. அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் இதற்கு உள்ளன.

மறுக்க முடியாது
இதை எல்லாம் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. முதல்வராக கருணாநிதி இருந்த போதே கடல் சார் ஆய்விற்கும், ஆழ்கடல் தொல்லியல் ஆய்விற்கும் மிகுந்த முயற்சி மேற்கொண்டார். 1990ல் கடல் சார் ஆய்விற்கு பெரும்திட்டம் தீட்டியதும், பின்னர் கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தை கண்டுபிடிக்க சோதனை மேற்கொள்ளப்பட்டதும். அதில் சில கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின் கீழ்தான்.

கீழடி
தற்போது சிவகங்கையில் உள்ள கீழடியில் மாபெரும் ஆராய்ச்சிகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் எல்லாம் கீழடி ஆராய்ச்சியை திரும்பி பார்த்து உள்ளது. தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை இது வெளிக்கொண்டு வருகிறது. இதை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்ட போது திமுக அதை எதிர்த்தது. நான் நேரில் சென்று கீழடியில் பார்வையிட்டேன். அரிய அணிகலன்கள், கல் மணிகள், சுவர்கள், காளையின் எலும்புகள், சிந்து சமவெளி நாகரீக ஒற்றுமைகள், கருப்பு சிவப்பு நிறம் கொண்ட பானைகள் காணப்பட்டன.

செழிப்பு
நாம் மிகவும் செழிப்புடன் வாழ்ந்தது இந்த ஆய்வில் தெரிய வந்தது. அதோடு கார்பன் டேட்டிங் சோதனையில் கிமு 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு மிக்க சமூகமாக தமிழ் சமூகம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி என்பது உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்தது. இதன் காரணமாகவே கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகள, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழசுரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

ஆலோசனை
இந்த ஆய்வு மற்றும் அதன் பின் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில், பல திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கிறது. இங்கு பல நாணயங்கள் கிமு 6ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக கீழடி நாகரீகம் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கார்பன் டேட்டிங் சோதனை உறுதி செய்யபட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.

கார்பன் டேட்டிங்
முந்தைய அகழாய்வுகளில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனை முடிவின் படி கொற்கை துறைமுகம் கிமு 8ம் நூற்றாண்டுக்கு முன்பே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொற்கை துறைமுகம் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டதை கண்டுபிடித்துள்ளனர். அதேபோல் ஆதிச்சநல்லூர் சிவகளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவிற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளது.

நெல்மணிகள்
கார்பன் டேட்டிங் சோதனையில் இந்த நெல்மணிகள் காலம் கிமு 1155 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் 3200 ஆண்டுகள் முற்பட்டது என்பதை இந்த சபையில் அறிவிப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு இனி தமிழ்நாட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டிலிருந்து துவங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications