Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு- பினராயி விஜயன் வரவேற்பு! ஆளுநர் ரவிக்கு மூக்கறுப்பு-திருமாவளவன் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த கருத்து: உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. கூட்டாட்சி தத்துவத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் உறுதி செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகளின் மாண்பை உறுதி செய்து, மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவு எடுக்க கால வரையறை செய்துள்ளது. இது மக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்படும் மாநிலங்களின் ஆளுநர்களுக்கு எதிரான கடுமையாக செய்தி.

Pinarayi Vijayan stalin supreme court india tamilnadu rn ravi

சிபிஎம் வரவேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): மோடி அரசின் முகத்தில் அறைந்துள்ள தீர்ப்பு இது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. தமிழ்நாடு ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். கேரளா உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஜனநாயகத்தையும் கூட்டாட்சி தத்துவத்தையும் நிலை நிறுத்தியுள்ளது உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு.

இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி- கனிமொழி

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி: தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

திருமாவளவன் வரவேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக் கழக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுகணக்கில் அவற்றைக் கிடப்பில் போட்டுவைத்ததுடன், தனது சட்டப்பூர்வமான கடமையையும் ஆற்றாமல், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு இன்று உச்ச நீதிமன்றம் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளது.

முரட்டு பிடிவாதத்தால் மூக்கறுபட்ட ஆளுநர் ரவி

அவரது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பின்புலம் அவரை முரட்டுப் பிடிவாதக்காரராக வளர்த்தெடுத்துள்ளது. அதனால் அவருக்கு இந்த மூக்கறுப்பு இன்று நடந்தேறியுள்ளது. "மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு, 10 மசோதாக்களை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புவது சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி தவறானது. அத்துடன், 10 பல்கலைக் கழக மசோதாக்கள் மீதும் குடியரசுத் தலைவர் அவர்கள் எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் பொருத்தமற்றவையாகும்.

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்

ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டதாக அறிவித்ததற்கு முன்பு நீண்டகாலம் எதுவும் சொல்லாமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளிலேயே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை." என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது ஆர்.என்.ரவிக்கு மட்டுமின்றி பாஜக அல்லாத மாநில அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு முடக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கும் பாடமாக அமைந்துள்ளது.

ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்திடுக

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டது. இதற்குப் பிறகும் ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் தொடர்வது முறையல்ல. தானே முன்வந்து பதவி விலகும் அளவுக்கு அவர் பக்குவம் நிறைந்த பண்பாளர் அல்ல. எனவே, முனைவர் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகக் குற்றம் இழைத்த அவரை ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அனுமதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும் என்பதால் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஆர்.என்.ரவி அவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இயற்றும் சட்ட மசோதாவை இனிமேல் ஆளுநர் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்ற காலக்கெடுவையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இது, அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்த உறுப்புகளுக்கு இதுவரை தவறாகப் பொருள் சொல்லி வந்த நபர்களுக்குப் போடப்பட்ட கடிவாளமாகும். அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதிலும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசால் அரசமைப்புச் சட்டம் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகிவரும் சூழலில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் ஆட்சியின்மீதும் வெகு மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு மிகப் பெரும் வெற்றி

மாநில உரிமைகள் என்னும் களத்தில் இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்மாதிரிகளை உருவாக்கும் சிறப்பு பெற்ற தமிழ்நாடு அரசுக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். இந்தச் சட்டப் போராட்டத்தை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையை வென்றெடுத்துத் தந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆளுநர் என்பவருக்கு தனிப்பட்ட வீட்டோ அதிகாரம் எதுவும் கிடையாது; ஆளுநர் என்பவர் அரசியல்வாதியாகவும் செயல்படக் கூடாது; மாநில அரசுக்கு வழிகாட்டியாக ஆலோசகராக இருக்க வேண்டும்; மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என காட்டமான தீர்ப்பு

மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம், ஒரு மசோதா மீது ஆளுநர் முடிவு எடுப்பதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+