வருமான வரி சோதனை: அ.தி.மு.க-பா.ஜ.க தோல்வி பயத்தை பிரதிபலிக்கிறது - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
சென்னை: தேர்தல் நெருங்கும் வேளையில் வருமானவரி சோதனை நடத்துவது தமிழக மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை கொடுக்கும் என்றும் அதிமுகவுக்கு படுதோல்வியை கொடுக்கும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு வருமான வரித்துறையை தனது அரசியல் லாபத்திற்காக ஏவல் துறையாக பயன்படுத்தி தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலின் அன்பு மகள் செந்தாமரையின் சென்னை நீலாங்கரை இல்லத்திலும், மருமகன் சபரீசனுக்கு சொந்தமான ஐந்து இடங்களிலும், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினரும் , தி.மு.க. வேட்பாளருமான மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தோல்வி பயம் தெரிகிறது
பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டோர் மு.க..ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சர் என்று தெள்ளத்தெளிவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் தமிழகத்திற்கு வந்து மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.அவர்கள் செல்லும் இடமெல்லாம் தோல்வியே பிரதிபலிக்கிறது. இதனால் படுதோல்வி பயம் அவர்களுக்கு தெரிந்துவிட்டதால் வருமான வரி சோதனை நடத்தி அச்சுறுத்தலாம் என நினைக்கிறார்கள்.

தமிழக மக்கள் கவனிக்கிறார்கள்
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஆதாரத்தோடு பட்டியலிட்டு மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை .
அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் கொள்ளையடித்த பணத்தை தேர்தலில் வாக்குகளுக்கு ஆங்காகே வழங்கி வருகிறார்கள். கையும்களவுமாக பிடித்து கொடுத்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் தமிழக மக்கள் உன்னிப்பாக பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அனுதாப ஓட்டு விழும்
கடந்த 25-ம் தேதி திருவண்ணாமலையில் முக.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருத்தபோது முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். தேர்தல் நெருங்கும் வேளையில் வருமானவரி சோதனை நடத்துவது தமிழக மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியையும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்பதற்கு இந்த வருமானவரி சோதனையே சாட்சியமாகும் என்று தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications