ராகுல் ஜி கேட்டுச்சா..பாகிஸ்தான் இளைஞருக்கு பிரதமர் மோடியின் முக்கியத்துவம் தெரியுதே..குஷ்பு ட்வீட்
பாகிஸ்தானை சேர்ந்த இளைஞருக்கு நமது பிரதமரின் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது என்று குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தங்களைக்காக்கும் ரட்சகன் மோடிதான் என்று பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். 8 ஆண்டுகள் பாகிஸ்தானை மோடி ஆட்சி செய்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது ராகுல்காந்திக்கு கேட்கிறதா என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பல நாடுகளின் பொருளாதார சூழ்நிலையை புரட்டிப்போட்டு விட்டது. இந்தியாவின் அண்டை நாடுகளில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார குழப்பம் அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டது. இந்த இரு நாடுகளைத் தொடங்கி வரிசையாகப் பல நாடுகளிலும் இதே நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்போது பாகிஸ்தானிலும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் கூட உச்சம் தொட்டுள்ளது.
இதனால் அந்நாட்டு மக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிலைமையை அந்நாட்டு அரசு வெளிநாட்டு உதவிகளைக் கோரியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்தாலும், அது பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, வருமானத்தை அதிகரிக்க வரி மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டது.
இதனால் அங்கு அனைத்து அடிப்படை பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 250 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. ஒரு கிலோ சிக்கன் 750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதற்கிடையே அங்குள்ள இளைஞர் ஒருவர் பிரதமர் மோடி குறித்து பேசும் பேச்சு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சனா அம்ஜத் அங்குள்ள மக்களிடம் அரசு குறித்து கருத்து கேட்கிறார். அப்போது தற்போதுள்ள ஷெபாஸ் ஷெரீப் அரசை கடுமையாக விமர்சிக்கும் இளைஞர் ஒருவர், நரேந்திர மோடி தங்கள் நாட்டை ஆட்சி செய்திருந்தால் தங்களாலும் நியாயமான விலையில் பொருட்களை வாங்கியிருக்க முடியும் என்று கூறுகிறார்.

1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. இஸ்லாமிய நாடு எங்களுக்கு கிடைத்தது. யாருமே இங்கு நிம்மதியாக இல்லை. இந்தியாவில் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சிக்கன் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பாகிஸ்தானில் சில இடங்களில், "நீங்கள் உயிர் பிழைக்க வேண்டுமென்றால்.. பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள், இந்தியாவில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் செல்லுங்கள்" என்று கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து சனா அம்ஜத் கேட்க ஒருவர், "நான் பாகிஸ்தானில் பிறந்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.. பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் எங்களால் நியாயமான விலையில் அடிப்படை பொருட்களை வாங்கியிருக்க முடியும். எங்கள் குழந்தைகளுக்கு தினசரி உணவை அளித்திருக்க முடியும் என்று கூறுகிறார் அந்த இளைஞர்.
நரேந்திர மோடியால் மட்டுமே மக்களை காக்க முடியும்.. மோடி நம்மை விட மிகவும் சிறந்தவர், அவரது மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள். நரேந்திர மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் தேவைப்பட மாட்டார்கள். மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் (பர்வேஸ்) முஷாரப் கூட தேவைப்பட்டிருக்க மாட்டார். எங்களுக்கு பிரதமர் மோடி மட்டுமே வேண்டும். ஏனென்றால் அவரால் மட்டுமே நாட்டில் இருக்கும் அனைத்து குளறுபடிகளையும் சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, நாம் மிக மோசமான நிலையில் உள்ளோம்.
பாகிஸ்தானை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது.. எனவே, இரு நாடுகளையும் ஓப்பிடவே கூடாது.. மோடியின் ஆட்சியில் வாழ நான் தயாராக இருக்கிறேன்.. மோடி ஒரு பெரிய மனிதர், அவர் மோசமான மனிதர் அல்ல.. இந்தியர்களுக்கு நியாயமான விலையில் தக்காளி, சிக்கன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது. இரவில் உங்கள் குழந்தைகளுக்கு உங்களால் உணவளிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு எனது வலி புரியும். மோடியை நமக்குக் கொடுத்து நாட்டை ஆள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கண்ணீருடன் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாஜக நிர்வாகி குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளைஞன் நமது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. இந்தியாவில் உள்ள பல இளைஞர்களுக்கு இது தெரியவில்லை. ராகுல்காந்தி இதை கேட்கிறாரா என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications