’கிட்னி பத்திரம்' தப்பித்தவறி இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. மருத்துவ நிபுணர்கள் கொடுத்த வார்னிங்
சென்னை: நோயின்றி வாழ்வது நலமாக வாழ்வதற்கான முதல் படி! ஆனால் நாம் தினமும் செய்யும் சில தவறான பழக்கங்கள் தான், நம்மை பெரிய உடல்நல பிரச்சனைகளுக்கு அழைத்துச் செல்கின்றன என்பதை அறிந்திருக்கிறீர்களா? குறிப்பாக, சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய சில சாதாரண பழக்கங்கள் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது தான்!" கிட்னிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்கள் எவை, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வதுண்டு.. ஒரு மனிதன் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருப்பதை விட, நோயில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்று பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். உடல் ஆரோக்கியம் என்பது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துச் செல்லும் வகையில் முன்னோர்கள் இதனை சொல்லியிருக்கிறார்கள்.

கிட்னிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்கள்
பொதுவாக, எந்த ஒரு நோயும் வந்த பிறகு அதற்கு சிகிச்சை பெறுவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்யாமல் தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தை காக்க வேண்டியது அவசியம். சில உணவுப் பழக்கவழக்கங்கள் உடல் உறுப்புகளை பாதிக்கக்கூடியதாக உள்ளன. அந்த வகையில், கிட்னிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்கள் எவை, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
வலி நிவாரண மருந்துகள்
* மருத்துவ ஆலோசனையின்றி அதிக அளவு வலி நிவாரண மருந்துகளை உட்கொள்வது, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
* இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் போன்ற ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) தலைவலி, உடல்வலி போன்றவற்றுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றி பயன்படுத்துவது ஆபத்தானது.
* நீண்ட கால அல்லது அதிகப்படியான பயன்பாடு, நாள்பட்ட இடைநிலை நெஃப்ரிடிஸுக்கு (சிறுநீரக அழற்சி) வழிவகுக்கும். இது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது.
உப்பு பயன்பாடு
* தூள் உப்புகளை விட கல் உப்பு அல்லது "ஹிமாலயன் பிங்க் சால்ட்" ஆகியவை உடல்நலனுக்கு நல்லது என சிலர் நம்பினாலும், உண்மையில் அனைத்து வகை உப்புகளும் ஒரே மாதிரியான வேதியல் பொருளான சோடியம் குளோரைடு கொண்டதுதான்.
* அதிக அளவு சோடியம் உட்கொள்வது, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. உடலில் உப்பு அதிகமானால், அதை சரிசெய்ய சிறுநீரகம் கடுமையாக உழைக்க வேண்டி வருகிறது. இது நாளடைவில் சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, உப்பை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அதிகப்படியான தண்ணீர் குடிப்பது நல்லதா?
* தேவையான அளவு நீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஆனால், 6 முதல் 7 லிட்டர் தண்ணீர் தினமும் குடிப்பது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
* அதிகமான தண்ணீர் குடிப்பதால், ரத்தத்தில் சோடியம் அளவு குறையும். இது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது மூளையில் வீக்கம், வலிப்பு, அல்லது மரணத்திற்கும் வழிவகுக்கலாம்.
* ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதே ஆரோக்கியமானது. இது தட்பவெப்ப நிலை மற்றும் உடல் உழைப்பு அடிப்படையில் மாறுபடும்.
தேவையான அளவுக்கு மட்டுமே
* அதிகப்படியான வலி நிவாரண மருந்துகள், அதிக உப்பு, தேவைக்கு மீறிய தண்ணீர், இவை அனைத்தும் சிறுநீரகத்தை பாதிக்கும் காரணங்கள்.
* எனவே, மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* உப்பை கட்டுப்பாடுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தேவையான அளவுக்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தூக்கம், உணவு, நடைபயிற்சி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
* கிட்னி ஆரோக்கியம் முழு உடல் நலன் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்!.












Click it and Unblock the Notifications