கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ஓவர்நைட்டில் மாற்றம்.. "திமுகவை பேசாத பேச்சு இல்லை, இப்ப பாருங்க".. ஆஹா
சென்னை: தீபாவளியையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டு வருகிறது. இதனை திமுகவினர் சுட்டிக்காட்டி அரசை பாராட்டி வருகிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால், லட்சக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பிருந்தே கிளம்பி செல்ல துவங்கிவிட்டனர். அந்தவகையில், சென்னையிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள், சொந்த ஊருக்கு கிளம்பினார்கள்..

சிறப்பு பேருந்துகள்: பயணிகளின் வசதிக்காகவே, கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும் 2,000 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 4,167 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.
இதைத்தவிர, தங்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்தர்.. கார், வேன் உள்ளிட்டவைகளையும் புக் செய்து, பயணமானார்கள். இதனால், அனைத்து வாகனங்களும் கடந்த 2 நாட்களாகவே சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒரே நேரத்தில் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்துவிட்டன.
வாகனங்கள்: இதனால், பயணிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.. குறிப்பாக, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. நேற்றைய தினம், நள்ளிரவிலும் கூட அதிகமான மக்கள் சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் வந்திருந்தனர்..
இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அரசு பஸ்கள், ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் வரிசைகட்டி நின்றன.. காரணம், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வருவதற்கு 4 வழிகள் இருக்கிறதென்றால், பஸ்டாண்டுக்குள்ளே செல்வதற்கு ஒருவழி மட்டுமே உள்ளது. இதனால், பஸ்கள் வெளியே போக முடியாமல் நின்றுவிட்டதால், கூடுதல் டிராபிக் ஏற்பட்டது. பஸ்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை.. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
பஸ் ஸ்டாண்டு: இரவு 9 மணி முதல் 12 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் எளிதில் செல்ல முடியவில்லை. இதனால், எல்லா பஸ்களும் சென்னை-திருச்சி சாலையில் நிற்க வேண்டிவந்தது.. இந்த டிராபிக் சீராகவே நள்ளிரவு 12 மணி ஆகிவிட்டது.
இதனால், உரிய நேரத்துக்கு ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடுப்படைந்தனர். அதிக கூட்டம் காரணமாக கிளாம்பாக்கத்தில் நெட் வொர்க் பிரச்சினையும் ஏற்பட்டதால், ஜிபே உள்ளிட்ட பேமண்ட் செயலிகள் வேலை செய்யவில்லை.. இதனால் ஏராளமானோர் ஏடிஎம்களுக்கு செல்ல ஆரம்பித்து, அங்கேயும் வரிசை நீண்டதை காண முடிந்தது.
புதிய மாற்றம்: ஆனால், இன்று காலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதி காலியாகிவிட்டது.. நெரிசல் என்பது கொஞ்சமும் இல்லாமல், இயல்பாகவும், அமைதியாகவும் காணப்பட்டு வருகிறது.
வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை தினத்தன்றுகூட, தாம்பரம்,பெருங்களத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று இரவு கடும்கூட்டத்தால், திக்குமுக்காடிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, தற்போது நெரிசலின்றி காணப்படுகிறது.
வரவேற்பு: இதனை திமுகவினர் வரவேற்று, சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.. "கிளாம்பாக்கம் திறந்தப்போ பேசாத பேச்சு இல்ல. .. இப்போ மக்களுக்கே தெரிஞ்சுருக்கும். திமுக அரசு ஒன்னு செஞ்சா அது மக்களுக்காக தான்னு" என்றெல்லாம் பாராட்டி வருகிறார்கள்.
இத்தனைக்கும், தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க அரசு சார்பில் 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.. மேலும் 500 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் சிலர் நேற்றிரவுகூட புகார் தெரிவித்திருந்தனர். ஆனாலும் ஒரே இரவில் திக்குமுக்காடிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதி போக்குவரத்து நெரிசலின்றி காணப்படுவது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications