இந்த முறையும் 3 சீட்? திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழுவை அறிவித்தது கொமதேக!
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, திமுக உடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொமதேக-வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நடிகர் விஜய்யின் தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் மநீம-வுக்கு 3, முஸ்லிம் லீக், மமக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோருக்கு தலா ஒரு தொகுதி என்ற கணக்கில் திமுக தலைமை கணக்கு போட்டு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் இம்முறை கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்தாலும் கடந்த முறை அளித்த 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மதிமுக-வுக்கு மீண்டும் 6 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளதாம், இல்லையென்றால் தொகுதி எண்ணிக்கை குறையும் எனக் கூறப்படுகிறது.
விசிக கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஒரு தொகுதி வரை கூடுதலாக கொடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேமுதிகவுக்கு 7 சட்டசபை தொகுதிகளையும் 1 ராஜ்யசபா சீட்டும் கொடுக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அக்கட்சிக்கு அதிகபட்சமாக 28 தொகுதிகள் வரை பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது. அந்தக் கட்சி அமைத்து பேச்சுவார்த்தை குழுவுடன் திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ். செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திமுக தரப்பில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி நடராஜன், முன்னாள் எம்.பி சினாஜ், சூரியமூர்த்தி, நித்தியானந்தம், எம்.பி மாதேஸ்வரன் ஆகிய 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் கொமதேக-வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. திருச்செங்கோடு, பெருந்துறை மற்றும் சூலூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளில் கொமதேக போட்டியிட்ட நிலையில் திருச்செங்கோட்டில் மட்டும் ஈஸ்வரன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications