கேஎன் நேரு மீது வழக்குப்பதியாத போலீஸ்.. மீண்டும் ஹைகோர்ட் போன இன்பதுரை.. அடுத்த பிளான் ரெடி
சென்னை: அமைச்சர் கேஎன் நேரு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை எழுதிய கடித்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் அதிமுக ராஜ்யசபா எம்பி இன்பதுரை சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கேஎன் நேரு உள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கேஎன் நேரு வலம் வருகிறார். இந்நிலையில் தான் அவர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்பட 2,538 பணியிடங்களை நிரப்ப லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை கடிதம்
இதுதொடர்பாக அமலாக்கத்துறை விவரங்களை சேகரித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பியது. கேஎன் நேரு ரூ.1,020 கோடிக்கு ஊழல் செய்துள்ளதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் கேஎன் நேரு மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. 2வது முறையாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் போலீஸ் கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து அதிமுக ராஜ்யசபா எம்பி இன்பதுரை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் கோரிக்கை
அதில், ''ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தெளிவாக கூறியுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கடந்த மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார்.
வழக்குப்பதிய உத்தரவு
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 20ம் தேதி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தில் ஆதாரங்கள் உள்ளன. இதனால் அமைச்சர் கேஎன் நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அதிரடி காட்டியது.
மீண்டும் முறையீடு
ஆனால் தற்போது வரை லஞ்ச ஒழிப்பு போலீசார், கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் தான் அதிமுக எம்பி இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் தமிழ் செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி முக்கிய முறையீட்டை முன்வைத்தார். ''உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் கேஎன் நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை'' என்று முறையீடு செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
அதற்கு உயர்நீதிமன்றம், ''உத்தரவிட்டு 3-4 நாட்கள் தானே ஆகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும். இதுதொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல் செய்தால் நடைமுறைப்படி விசாரணை நடத்துவோம்'' என்றார். இதையடுத்து இன்பதுரை சார்பில் கேஎன் நேரு ஊழல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications