5 பைகளில் ஆவணங்கள்.. அதை வைத்துதான் அதிமுகவை எடப்பாடி கைப்பற்றினார்.. கனகராஜ் சகோதர் தனபால் பகீர்!
சென்னை: கனகராஜ் எடுத்து வந்த 5 பைகளிலும் அனைத்து அதிமுக அமைச்சர்களின் ஆவணங்கள் உள்ளது என்றும் அதை வைத்துதான் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றியதாகவும் கனகராஜ் சகோதரர் தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் வெளி வந்த தனபால், அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது "என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் கோடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு வழக்கில் ஏற்கனவே 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கும் தனபால் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், தனபாலிடம் மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உதகை நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு தயாராக இருப்பதாக கார் ஓட்டுநர் கனராஜ்ஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார். இது தொடர்பாக தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோட நாடு வழக்கில் என்னை விசாரிக்க வேண்டும் என்று உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி அனுமதி வாங்கியுள்ளது. இதை செய்திகள் வாயிலாக பார்த்தேன். விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயராக இருக்கிறேன்.
சென்னை, சேலம், ஊட்டி என எங்கு வேண்டும் என்றாலும் ஆஜர் ஆக நான் தயாராக இருக்கிறேன். எனக்கு சம்மன் எப்போ வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நான் தனிமனிதனாகத்தான் இருக்கிறேன். என்னை இயக்கும் அளவுக்கு எந்த அரசு ஆதரவும் இல்லை. அமைச்சர்களின் ஆவணங்கள் இருந்துள்ளது. இந்த ஆவணங்களை வைத்துத்தான் கட்சியை எடப்பாடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். பணம் எதுவும் கைமாறவில்லை.
எல்லாம் ஆவணம் தான் கைமாறியிருக்கிறது. கொடுக்க வேண்டிய தொகையை தம்பியிடம் பேரம் பேசியிருக்கிறார்கள். பேரம் பேசியதில் எனது சொந்தந்க்காரர் மூன்று பேர் இருக்காங்க.. அவர்கள்தான் என் தம்பியை மூளை சலவை செய்து இருக்கிறார்கள். இவ்ளோ நாள் கார்டனில் வேலை பார்த்து இருக்கிறாய்.. உனக்கு என்ன செய்து இருக்கிறார்கள். நான் உன்னை நன்றாக வாழ வைக்கிறேன். நம்ம ஊர் கார பையன் நீ..
எனக்கு ஒத்துழைப்பு கொடு... சொல்வதை செய் என மூளை செலவு பண்ணித்தான் இந்த விவகாரத்திற்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். தம்பி (கனகராஜ்)யிடம் 25 கோடி ரூபாய் பேரம் பேசியிருக்கிறார்கள். அதனால்தான் இதை எல்லாம் சேலத்திலும் சங்ககியிலும் கொடுத்த பிறகு பணம் கேட்கும் போதுதான் பிரச்சினையே வந்துள்ளது. அப்போ வந்து தம்பியை அடிக்கிறார்கள். திங்கள் கிழமை நைட் இது நடக்கிறது.
செவ்வாய்க்கிழமை பையை கொடுக்கிறார்கள். விபத்து வெள்ளிக்கிழமை நைட் நடந்துள்ளது. கடந்த முறை அதிமுக ஆட்சி அவர்களின் ஆட்சி இருந்தது. இப்போது திமுக ஆட்சி உள்ளது. நல்லா செயல்படுறாங்க.. ஏன் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தப்பு இல்லை என்றால் என்னை விசாரியுங்கள் என்று அவர் வரலாமே..
ஏன் அவர் வர மறுக்கிறார். மீடியாக்காரர்கள் கேட்டாலே அவர் முகம் எல்லாம் மாறுது.. நடுங்குகிறார். எதற்காக நடுங்க வேண்டும். இப்போது நான் போலீஸ் கண்காணிப்பில் தான் உள்ளேன். என் உயிருக்கு எதாவது ஆனால் அது பழனிசாமி தலைமையில் தான் நடக்குது என்று அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications