கோடநாடு வழக்கில்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனிடம் விசாரணை.. பரபர பின்னணி
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் கனகராஜ் தொடர்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவக்குமாரை அழைத்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அதோடு அங்கு பணியாற்றி வந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

மற்றொரு காவலாளி காயமடைந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை தீவிரப்படுத்திய நிலையில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடந்தன. கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் என கூறப்படும் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ல் விபத்தில் பலியானார்.
இதனால் இந்த வழக்கில் பல மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருந்தன. 200க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடத்தியும் கூட வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, நீலகிரி, சேலம் பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை ஆஜராகி உள்ளார். இவரிடம் அவினாசி சாலை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது கொடநாடு வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். கனகராஜ் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் ஆம்புலன்ஸுக்கு சிவக்குமார் தான் தகவல் அளித்தார்.
இதனால் சிவக்குமாரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து அவரை அழைத்து இருந்தனர். இதையடுத்து சிவக்குமார் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார். இந்த வேளையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது விபத்து எப்படி நடந்தது? நீங்கள் எதற்காக அங்கு சென்றீர்கள்? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் கனகராஜை முக்கிய நபராக போலீசார் கருதினர். ஆனால் அவர் விபத்தில் பலியாகி இருந்தார். இந்நிலையில் தான் கனகராஜ் சிக்கிய விபத்து குறித்த விபரங்களை அறிய சிவக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications